Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

"வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்"நல்லையா தயாபரன் 

$
0
0
பலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னையிலிருந்து செப்டெம்பர் 1986ல் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வந்து அக்டோபர் 15, 1986  திரும்பிச் செல்லும் வழியில் அநியாயமாகக் கொலையுண்டு,  முப்பதுவருட காலங்கள் உருண்டோடிச் சென்றுவிட்டன. தமது அதிகாரத்துக்கும், பதவிக்கும், பிரசித்திக்கும், அரசியலை பயன்படுத்தி, மக்களை உரமாக்கியவர்கள் வாழ்ந்த காலத்தில், மக்களின் அரசியல் விடிவுக்காக நீதிக்கும், நியாயத்துக்குமாகப் போராடி, தன்னையே உரமாக்கியவர்தான்நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன்.

அராஜகவாதிகளும், சுயநலமிக்க கர்வம் கொண்ட வறட்டு வேதாந்திகளும், தம்மை முன்னேறிய பிரிவினர் என நாமம் பூசிக் கொண்டவர்களும், பணமே பலம் என்னும் கூற்றைத் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்தவர்களும் மத்தியில், தீர்க்கம் நிறைந்த கண்களும், மெல்லிய உடல்வாகும், மிகவும் மென்மையான உள்ளமும், இனிய சுபாவமும் கொண்ட நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், அவரது முப்பத்து நான்கு வருட வாழ்வில், உறுதியான கொள்கைப் பிடிப்புள்ள, மனித நேயமிக்க, சமூகப் பிரக்ஞை கொண்ட, எளிமையான, நேர்மையான மனிதராக வாழ்ந்திருந்தார்.

நவம்பர் 29, 1952ல் கரவெட்டியைச் சேர்ந்த கல்லுவம் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், “வளரும் பயிரை முளையிலே தெரியும்” என்பதற்கமைய, உடுப்பிட்டி அமெரிக்க மிசன் பாடசாலை மாணவனாக இருந்தபோதே, தெளிவும், தீட்சண்யமும் மிக்கவராக, சமூக உட்கொடுமைகளையும், சாதிய முறைமைகளையும் எதிர்த்த பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த முருகுப்பிள்ளை கார்த்திகேசனுடன் இணைந்து, புரையோடிக் கொண்டிருந்த சாதியத்தின் மோசமான பரிமாணங்களை, தன் பதின்பருவத்திலே இனங்கண்டு, யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தார்.

1971 ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி, அங்கு கல்வி பயிலும் காலத்தில், நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், "நதி"சஞ்சிகைக்குழுவிலும், மலையக மக்கள் இயக்கத்திலும், “கண்டி கலாச்சாரக் குழு”விலும் இணைந்து பணிபுரிந்தார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் சிறிதுகாலம் போதனாசிரியராக வேலையாற்றினார்.

எழுபதுகளில் இந்தியாவில் தலைமறைவாக இயங்கிய பல்வேறு சமூகவிடுதலை இயக்கங்களை இரகசியமாகச் சந்தித்து வந்த வேளையில், இலங்கையிலிருந்த தனது நண்பர்களை மாதக்கணக்காகத் தொடர்பு கொள்ளாதலால், விஸ்வானந்ததேவன் இந்தியாவில் காலமாகிவிட்டார் என்று பரவிய வதந்தியை நம்பி,  மலையக மக்கள் இயக்கத்தின் சார்பில் லக்ஸ்மன் சாந்திகுமார்,  துண்டுப்பிரசுரம் மூலம் அஞ்சலியும் தெரிவித்திருந்தார்.

பின்னர் இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், முருகுப்பிள்ளை கார்த்திகேசன் (1919-1977), நெடுந்தீவு சின்னத்தம்பி சண்முகநாதன்(1953-2016), கந்தசாமி யோகநாதன் (கவிஞர் சாருமதி (1926-1998), பாண்டிருப்பு சண்முகம் சிவலிங்கம் (ஸ்டீவன் மாஸ்டர் (1936-2012), சுதுமலை வீ.ஏ கந்தசாமி (1924-1992), இரத்தினகோபால் ஜெயபூரணபாலா உட்பட பலருடன் இணைந்து “தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி” என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.
விஸ்வானந்ததேவன் “தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி”யின் பிரதான இயக்கசக்தியாகவும், தீவிர இயங்குசக்தியாகவும், உறுதியான தெளிவுமிக்க கொழுகொம்பாகவும் இருந்த அதேவேளை,  “தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி”க்கு வெளியே, முற்போக்கு ஜனநாயக தேசபக்த சக்திகள் மத்தியில் ஏராளமான நண்பர்களைக் கொண்டிருந்ததோடு, முற்போக்கு ஜனநாயக தேசபக்த சக்திகள் அனைவருக்கும் உற்சாகம் அளித்து, அரவணைக்கும் பண்புடன் பணியாற்றினார்.

“தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி”யின் செலவுகளுக்காக பணமில்லாத நிலையில், விஸ்வானந்ததேவன் தனது பெற்றோரின் காணிகளை அடகு வைத்து, “தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி”யின் செயற்பாடுகளைத் தொடர்ந்தவர். எரிவதாகக் காட்டிக்கொண்டு, பலர் தமக்கு எண்ணெய் சேர்த்துக் கொண்டிருந்த காலங்களில், எண்ணெயே இல்லாது, தன்னையே எரித்து, தியாகச் சுடராக எரிந்தவர்தான் விஸ்வானந்ததேவன்.

நண்பர் விஸ்வலிங்கம்  விஸ்வானந்ததேவன் 1980ல் காங்கேசன்துறை லங்கா சீமெந்து நிறுவனத்தில், பொறியியலாளராக பணியாற்ற இணைந்தார். ஆனால் சிறிது காலத்தில், காங்கேசன்துறை லங்கா சீமெந்து நிறுவன ஊழியரின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்ததால், விஸ்வானந்ததேவனும் அவரது மனைவி ஜெயலக்சுமியும், வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.  வேலை பறிபோனதை பற்றி எதுவித கவலையுமின்றி, மக்களுக்காக தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்து, தன்னடக்கத்துடன் தன் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தி, பேரினவாதத்தை மறுதலிக்கின்ற அதேவேளை, குறுந்தேசிய உணர்வலையில் அள்ளுப்பட்டுப் போகாது, தீவிரமாக சேவை செய்த, ஒரு தன்னலமற்ற இளைஞர்தான் நண்பர் விஸ்வலிங்கம்  விஸ்வானந்ததேவன்.

எண்பதுகளின் ஆரம்பத்தில், பொறியியலாளர் மாவை நித்தியானந்தன் எழுதி, அளவெட்டி "ஞாயிறு படைப்பாளிகள் வட்டம்"என்ற அமைப்பைச் சேர்ந்த கலைஞர்கள் நடித்த “திருவிழா” எனும் வீதி நாடகத்தை, பல்வேறு இடங்களில் அரங்கேற்றுவதில், உந்துசக்தியாக திகழ்ந்த நண்பர் விஸ்வலிங்கம்  விஸ்வானந்ததேவன், "பயணம்"என்ற சஞ்சிகை மூலம், முற்போக்கு அரசியல் கருத்துக்களையும், ஆக்கங்களையும் வெளியிட்டார்.

அக்காலகட்டத்தில், பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு அடர்ந்த முடி மற்றும் தாடியுடன், கூடவே தோளில் தொங்கும் ஒரு துணிப்பையுடனும், அடிக்கடி வருகை தந்த நண்பர் விஸ்வலிங்கம்  விஸ்வானந்ததேவன், “அக்பர்-நெல் விடுதி”யில் என்னுடன் தங்கியிருந்து, கந்தசாமி பத்மநாபா, அழகையா துரைராஜா, சிவானந்தம் சிவசேகரம், எச்.என். பெனாண்டோ, ஜயரட்ண மல்லியகொட, நியூட்டன் குணசிங்க, பெரியசாமி முத்துலிங்கம், குருநாதன் பவானந்தன் உட்பட பலரைச் சந்தித்து, இலங்கை அரசியல் நிலவரங்கள் குறித்து அவர்களது எண்ணங்களையும், கருத்துக்களையும், தெளிவாகச் செவிமடுப்பார்.  இவ்வுரையாடல்களின்போதுதான் விஸ்வானந்ததேவன் எத்தகைய மனப்பக்குவமும், சமூதாய உணர்வும் கொண்டவர் என்பதைப் புரிய முடிந்தது.

விஸ்வானந்ததேவனிடம் இருந்த கருத்து வேறுபாடுகளை முரண்பாடுகளாக்கி கொள்ளாது, முரண்பாடுகளைப் புரிந்துணர்வோடு ஏற்றுக் கொண்டு, மற்றவர்களின் அபிப்பிராயங்களைத் தெளிவாகச் செவிமடுக்கும் மனப்பக்குவம், பலரும் அவரைச் சிறந்ததொரு முன்மாதிரியாக கொள்வதற்கு வழி சமைத்தது.  மற்றவர்களின் கருத்துக்களைச் சரியாக அறிந்து கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்தான், தமது சொந்தக் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்கு அருகதையுடையவர் என்பது மனித நிலைப்பட்ட நாகரிகமாகும். இத்தகைய உயரிய நாகரிகத்தைக் விஸ்வானந்ததேவன் கடைப்பிடித்ததோடு, மற்றவர்களுடனான அத்தகைய கலந்துரையாடல்களில் பெற்ற அறிவு மற்றும் அனுபவத்தைக் கொண்டு, தனது எண்ணங்களையும், கருத்துக்களையும் விஸ்வானந்ததேவன் பட்டை தீட்டிக் கொள்வார். விஸ்வானந்ததேவன் தன் அமைப்புக்கு வெளியே, தனிநபர்களாகவும், வேறு அமைப்புக்களிலும், தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகள் இருக்கின்றார்கள் என எண்ணி இயங்கியவர்.

நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளையும், தந்திரோபாயங்களையும், முன்வைக்க முடியாத, பிற்போக்கான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின், தமிழ் உணர்வூட்டும் அர்த்தமற்ற வெற்றுக் கோசங்களையும்  கோரிக்கைகளையும் குமிழிகள் போல உருவாக்கி ஊதிப் பெரிதாக்கி உணர்ச்சிகளின் கொதிப்பில் குளிர்காய்ந்த ஏமாற்று அரசியலை அம்பலப்படுத்தி வெளிவந்த "புதிய பாதை"பத்திரிகையின் ஆசிரியர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்), ஜனவரி 02, 1982 சித்திரா அச்சகத்தில் "புதிய பாதை"பத்திரிகையை அச்சிட்டுக் கொண்டிருந்த வேளை, சுட்டுக் கொலை செய்யப்பட்ட போது, உடனடியாக அப்படுகொலையைக் கண்டித்து சுவரொட்டிகளையும் துண்டுப் பிரசுரங்களையும் விஸ்வானந்ததேவன் வெளியிட்டதோடு, "புலிப்படைத் தளபதி சுந்தரம் படுகொலை"என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரத்தை அச்சிட்டவர்கள், அதனை விநியோகிக்கப் பயந்தபோது, அத்துண்டுப் பிரசுரத்தையும் துணிவோடு யாழ்ப்பாணக் குடாநாட்டில் விநியோகித்தார்.

அதிகார பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும், ஆயுத பலத்தில் நம்பியிருப்பவர்களுக்கும், எதிரான அரசியல் கருத்துடன் செயற்பட அதிக துணிச்சல் தேவை.  நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன் அதிகார பீடத்தில் அமர்த்திருப்பவர்களினதும், ஆயுத பலத்தில் நம்பியிருப்பவர்களினதும், தவறுகளை தவறென்று விமர்சிக்கத் தயங்காத துணிவுமிக்கவர்.
மே 11, 1983 பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில், விசுவானந்ததேவனின் நண்பரான பொறியியல் பீட முதலாம் வருட மாணவன் பாலசிங்கம் பாலசூரியன், அருணாசலம் விடுதியைச் சேர்ந்த நான்காம் வருட விஞ்ஞானபீட மாணவர்கள் துள்சி விக்ரமசிங்க, மற்றும் எக்கநாயக்க, பல் வைத்தியர் எஸ்.கமகே ஆகியோரின் தலைமையிலான கும்பல்களுடன் சேர்ந்து, பாலசிங்கம் பாலசூரியனுடன் ஒன்றாக கல்வி கற்ற பொறியியல் பீட முதலாம் வருட மாணவன் டபிள்யூ.என்.வீ.பெனாண்டோ உட்பட பலரால், மோசமாகத் தாக்கப்பட்டு, அதன் பின்னர் “பயங்கரவாதி” என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்ட விஸ்வானந்ததேவன், பேராதனைப் பல்கலைக் கழகமும் விசாலமான பரந்துப்பட்ட பார்வையை இழந்து, கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்த இனவெறியினால், இனவாத சகதிக்குள் வீழ்ந்து மூழ்குவதாக விசனம் தெரிவித்தார்.

ஜூலை 1983ல் இடம்பெற்ற வெலிக்கடைச் சிறையில் தமிழ்க் கைதிகள் படுகொலை, நாடு தழுவிய இனக்கலவரங்கள், கொழும்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர் அனைத்தையும் இழந்து அகதி முகாம்களில் அடைப்பு போன்றவற்றையடுத்து, ஒட்டுமொத்தமாக இலங்கையின் எதிர்காலமே இனவெறியர்களால் எரிக்கப்பட்டுள்ளது என விஸ்வானந்ததேவன் கனத்த இதயத்துடன் மிகவும் கவலைப்பட்டார்.

"புதிய பாதை"ஆசிரியர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தியின் (சுந்தரம்) படுகொலைக்குப் பின்பு "புதிய பாதை"பத்திரிகையை, மீண்டும் யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு பல இதழ்களை வெளிக்கொணர, எனக்கு பல்வேறுபட்ட வழிகளிலும், விஸ்வானந்ததேவனும் கூடவே அவரது நண்பர் சாரங்கபாணி விவேகானந்தனும் கைகொடுத்துதவினர்.

முக்கியமாக அச்செழுத்து உருக்களை வைத்து, அச்சகத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்பதால்,  யாழ்ப்பாணத்திலுள்ள அச்சகங்களில் இல்லாத அச்செழுத்து உருக்களை, இந்தியாவிலுள்ள "சுதேசி டைப் பவுண்டரி"யில் இருந்து தருவித்து அச்சுக் கோர்த்து, "புதிய பாதை"பத்திரிகையை யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு பல இதழ்களை வெளியிடுவதற்கு, விஸ்வானந்ததேவன் எனக்கு உதவி புரிந்தார்.

இவர் சார்ந்த தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி 1983 செப்டம்பர் 3ம் 4ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (NLFT) எனப் பெயர் மாற்றப்பட்டது. இக்கால கட்டத்தில் "இலக்கு"என்ற சஞ்சிகையும் "முன்னணிச் செய்தி"என்னும் பத்திரிகையையும், தமது அமைப்பினூடாக வெளியிடுவதில், விஸ்வானந்ததேவன் முன்னின்று பணியாற்றினார்.

ஜூலை 1983ல் இடம்பெற்ற  இனக்கலவரங்களையடுத்து தமிழ் தேசிய எழுச்சியில் மேலெழுந்து, புதியதோர் பரிணாமத்தை எட்டியிருந்த தமிழீழப் போராட்ட இயக்கங்களில், வடக்கு, மற்றும் கிழக்கில் இருந்து திரண்டெழுந்து இணைந்து கொண்ட பல இளைஞர்கள், தாம் இணைந்து கொண்ட இயக்கங்களை, அராஜகமிக்க வெறும் ஆயுதக்குழுக்களாக இனம்கண்டு, அவ்வாயுதக் குழுக்களிலிருந்து வெளியேற முற்பட்டனர். ஆனால், இந்த ஆயுதக்குழுக்களோ, தம்முடன் இணைந்த இளைஞர்களை வெளியேற அனுமதிக்காதது மட்டுமன்றி, தம்மைக் கேள்வி கேட்டவர்கள், தம்மிடமிருந்து தப்பியோடிப் பிடிபட்டவர்கள் போன்றவர்களை, தடுத்துவைத்து சித்திரவதை செய்தனர். தப்பியோடிப் பிடிபட்ட பல இளைஞர்களை இந்த ஆயுதக்குழுக்கள் கொலையும் செய்தனர். இவ்வாறு ஆயுதக்குழுக்களில் இருந்து விலகிய இளைஞர்களுக்கு, அடைக்கலம் கொடுத்தவர்களில் விஸ்வானந்ததேவன் மிகவும் முக்கியமானவர்.

ஆனால், அச்சமயம் அவர் சார்ந்த “தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி”யில் இருந்த பல வறட்டு வேதாந்திகள், அராஜக ஆயுதக்குழுக்களில் இணைந்த இளைஞர்கள் அனைவரும் “அராஜகவாதிகள்” என்றும், அராஜகவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது தவறு என்றும் விமர்சித்தனர். எனக்கும்கூட அடைக்கலம் தந்து தஞ்சமளித்தவர் விஸ்வானந்ததேவன்தான். தன்மக்களையும், தன்நிலத்தின் அரசியலையும், சகமனிதர்களின் தன் முனைப்புகளையும், நய வஞ்சகங்களையும், விஸ்வானந்ததேவன் சரிவரப் புரிந்து கொண்டிருந்தார்.

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, சகல முற்போக்குச் சக்திகளையும் ஒன்று திரட்டும் திறமை விஸ்வானந்ததேவனிடம் இருந்தது. விஸ்வானந்ததேவன் இல்லாதிருந்தால், “தீப்பொறி” என்ற அமைப்பு உருவாகியிருக்க முடியாது என்பது மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அநியாயமாகப் பலியாகியிருப்பார்கள். "தீப்பொறி"க் குழுவினரை இந்தியாவில் பாதுகாத்து, இலங்கைக்கு கொண்டுபோய்ச் சேர்த்த விஸ்வானந்ததேவன், "தீப்பொறி"பத்திரிகையை அச்சிட்டு வெளிக்கொணர்வதில் முக்கிய பங்காற்றினார்.

"தீப்பொறி"க் குழுவைச் சேர்ந்த சூசைப்பிள்ளை நோபேட் எழுதிய "புதியதோர் உலகம்"என்ற நாவலை அச்சிடுவதற்கு, முழுமையான பண உதவியை விஸ்வானந்ததேவன் தந்துதவியதோடு, சென்னையில் அச்சிட்ட "புதியதோர் உலகம்"நாவலின் பிரதிகளை, இலங்கைக்கு கொண்டு வந்து சேர்க்கவும் உதவினார். விசுவானந்ததேவனின் உதவியால்தான், இலங்கையிலும் “தீப்பொறி”க் குழுவினர் அனைவரும் உயிர்தப்பி வாழமுடிந்தது. 

தனிநபர்களையும், அமைப்புக்களையும், வஞ்சித்து தமது நோக்கங்களை நிறைவேற்றும் போக்குள்ளவர்கள் மலிந்த உலகில், குழுவாதத்தை நிராகரித்து, ஒற்றுமையாக சகல முற்போக்குவாதிகளையும் நேசக்கரம் நீட்டி அணைத்து அணிதிரட்ட, விஸ்வானந்ததேவன் கடும்முயற்சி செய்தார்.  எத்தகைய பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும்போது, நடுநிலையுடன் புறவயமாகச் சிந்தித்து, நண்பர் விஸ்வலிங்கம்  விஸ்வானந்ததேவன் செயலாற்றினார்.
சந்தர்ப்பவாதங்களே அரசியலாக அமைத்துவிட்ட நிலையில், மிகக்கேவலமான பின்னணியில் இனவாதமும், இனவெறியும், மோசமானதோர் நிலையை எட்டியபோது, குறுகிய தமிழ்த்தேசியவாத சிந்தனையில் மூழ்கிப் போகாது, விஸ்வானந்ததேவன் தனக்குக் கிடைத்த வாய்ப்பையெல்லாம், சமூக முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திய, வரலாற்றில் தனித்துவமான பாதையை வரித்துச் சென்ற, சீரிய முற்போக்குச் சிந்தனையாளராவார்.

தூரத்திலிருந்து பார்க்கும்போது பளபளவென பகட்டாக மின்னும் பலர், நெருங்கிச் சென்று பார்க்கும்போது தம் சுயத்தைக் காட்டி சுருங்கி விடுவர். ஆனால் விஸ்வானந்ததேவனோ நெருங்கிப் பழகிய போது, பரந்து, விரிந்து, உயர்ந்து நின்றார். இது அனைவருக்கும் சாத்தியமானதொன்றல்ல. நேர்மையும், நேசமும், சுய சிந்தனையுமுள்ள ஒருவருக்கே இது இயல்பான, இயலுமானதொன்றாக அமையும்.  விசுவானந்ததேவனின் உயர்ந்த உள்ளத்தையும், பண்பட்ட நெஞ்சத்தையும், பலரால் எட்டித் தொடக்கூட முடியவில்லை.  ஒரு ஞானிக்குரிய பற்றற்ற பரிபக்குவ நெஞ்சத்தால், நிறைந்து, நிமிர்ந்து நின்றவர் விஸ்வானந்ததேவன். அதனால் தன் அமைப்புக்கும் அப்பாற்பட்டு, அனைவரையும் அரவணைத்து, மானுடம் என்ற குன்றேறி நெடிது நின்றார்.

மானுடத்தை நேசித்த, மதித்த விஸ்வானந்ததேவன், மானுடத்தின் எதிரிகளையும் நன்கறிந்திருந்தார். இன்றைய சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார அதிர்வுகளை, எண்பதுகளிலேயே தெளிவாக விஸ்வானந்ததேவன் எதிர்வு கூறியிருந்தார். அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD)  கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு  உலகைக் கொள்ளையடிக்கிறார்கள் என நண்பர் விஸ்வலிங்கம்  விஸ்வானந்ததேவன் பெருங்கோபத்துடனும் கவலையுடனும் சொல்லியிருந்தார்.

அன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD)  கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட  அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும்,  நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன  என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து,  கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள் என்றும் விஸ்வானந்ததேவன் குறிப்பிட்டிருந்தார்.
தனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டதாகக் கூறிய விஸ்வானந்ததேவன், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின்  நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன்  மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது என்றார்.

வங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CREDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள் என மக்களின் எதிரிகளை இனங்காட்டி, மக்களின் எதிரிகளுக்கெதிராகக் குரலெழுப்பியவர் நண்பர் விஸ்வலிங்கம்  விஸ்வானந்ததேவன்.
நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை  அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் ஈட்டுக் கடன்கள் மூலம் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், உலக நிதிச் சந்தையில் உண்மையான உற்பத்தி சம்பத்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் வெறும் 1 சதவீதமாகவும், 99 சதவீதமான பரிவர்த்தனைகள் பந்தய ஒப்பந்தங்களும் ஊக வணிகங்களாகவும் (FUTURES & DERIVATIVES) மாறிவிட்ட தற்போதைய சூழ்நிலைகளில் “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும் காலாவதியான தகவல்களினதும் குவியல்களாக மாறிவிட்டன.

உலகம் பூராக,  உலகவங்கி  (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான சர்வவல்லமை பொருந்திய ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD)  கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் "பணநாயகம்"அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடுமென அன்றே ஆணித்தரமாக விஸ்வானந்ததேவன் தெரிவித்திருந்தார். இதனையே தத்துவஞானி அரிஸ்டோட்டல் 2,400 வருடங்களுக்கு முன் "Democracy is when the indigent, and not the men of property, are the rulers."  எனக் கூறியிருந்ததாக பல ஆங்கில நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

எண்பதுகளில் ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD)  கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோகக் கூட்டுகளினதும் "பணநாயகம்"எம்மவரில் பல புத்தகவாத வேதாந்திகளுக்கு புரியாது, இலங்கை ஒரு அரைக் காலனித்துவ நாடா அல்லது நவ காலனித்துவ நாடா என்று  வருடக்கணக்காக கூடாரம் போட்டு வீணான விவாதங்களை நடாத்தினர். ஆனால் இன்றைய தகவல் உலகில், சர்வதேச ஏகபோக நிதி மூலதனக் கொள்ளையர்களான ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD)  கும்பல் பற்றியும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோகக் கூட்டுகள் பற்றியும் சரிவர அறிந்து, புரிந்து கொள்வது சற்று இலகு.
அமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள் எனத் தெரிவித்திருந்த விஸ்வானந்ததேவன், 99 சதவீதமான மக்களின் சிந்தனை அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது என்று பலதடவை சொல்லியிருந்தார்.

எண்பதுகளில் மேற்குலகமும், சோவியத் யூனியனும் பொருந்திக் கொண்டிருந்த போது, சோவியத் யூனியனை வீழ்த்துவதற்காக, ஆப்கானிஸ்தானில் வேற்றுநாட்டு இசுலாமிய தீவிரவாத இளைஞர்களை ஆயுதபாணிகளாக்கி, சோவியத் யூனியனுக்கு எதிராக யுத்தத்தை நடாத்தி வந்த அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இதரநாடுகளுக்கும் எதிர்காலத்தில் அதே இசுலாமிய தீவிரவாத இளைஞர்களால், பலத்த பிரச்சனைகள் வருவதோடு, எதையும் உருப்படியாக மக்களுக்காக செய்யாது அழிவை மட்டுமே செய்கின்ற இசுலாமிய தீவிரவாத இளைஞர்களினால், அதிகளாவினாலான உயிரிழப்புகளையும், அழிவுகளையும் ஏற்படுத்த முடியுமே அன்றி, ஒருபோதும் மக்களுக்கு அமைதியையும் நிம்மதியையும் ஏற்படுத்த இயலாதென, விஸ்வானந்ததேவன் அன்றே எச்சரித்திருந்தார்.

அகன்ற மானிடத்தை நேசித்த விஸ்வானந்ததேவனுக்கு சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து விரிவான பரிமாணமும் செம்மையான கணிப்பும் இருந்தது என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமேயில்லை.

உயர்ந்த ஆளுமை உள்ளீடுகளைக் கொண்டிருந்த விஸ்வானந்ததேவனுடனான நட்பு, எனது பாக்கியம்  மற்றுமல்ல, எனது ஞானஸ்நானமும் கூட. மக்களுக்கு விடிவு காண விழைந்த ஒரு அரசியலுக்காக, தன்னை அர்ப்பணித்த விசுவானந்ததேவனுடன், சில ஆண்டுகள் நெருங்கிப் பழகியவன் என்ற வகையில், பாசமிக்க நண்பர் விஸ்வலிங்கம்  விஸ்வானந்ததேவன் பதித்துவிட்டுச் சென்ற அழியாத சுவடுகளை, நினைவு  மீட்டி, பகிர்ந்து கொள்ளும் இவ்வேளையில், “புதியதோர் உலகம்”  நாவலில் சமூகம் குறித்தும், மனித குலத்தின் நாகரிகம் குறித்தும், ஒரு தந்தை மகனுக்கு எழுதிய கடிதத்தின், பின்வரும் பகுதி, நினைவில் நின்று நிலைக்கின்றது.

"மனிதவாழ்வு மகத்தானது. ஒரு மனிதன் தன் அனுபவத்திரட்சியை, ஆற்றலைத் தன் சமூகத்திற்கு கையளிக்கின்றானே அதுதான் மனிதவாழ்விலே உயர்வானது. வேறு எந்தஜீவனுக்கும் மனிதன் தான்வாழும் சமூகத்திற்காக எதையும் கொடுக்கமுடியாது. நாம் விரும்பியோ, விரும்பாமலோ எமது முதாதையர் தந்த அறிவையும், அனுபவத்திரட்சியையும், ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஆகையால் இந்த பங்களிப்புக்களிலெல்லாம் எமக்கு ஈடுபாடு இல்லை என்று யாரும் சும்மா இருந்துவிடமுடியாது. நிச்சயம் நமது சமூகத்திற்கு எம் ஆற்றலையும் அறிவையும் வழங்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்."

ஒருவரின் வாழ்வே அவரது மிகச்சிறந்த உடமையாகும். மறைந்த விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவனின் வாழ்வு, சமகாலச் சமூகப் பிரச்சனைகளோடு இயைபுடையதாகின்றதால், விஸ்வானந்ததேவன் குறித்த மதிப்பீடுகள், முக்கியத்துவம் உடையதாகின்றன. "எளிமையான வாழ்க்கை - கடுமையான போராட்டம்"என்ற வகையில், விஸ்வானந்ததேவனது வாழ்வும், மனிதகுல மேம்பாட்டுக்கான அவரது வழிகாட்டலும், எம்மனைவருக்கும் ஒரு செவ்விய முன்னுதாரணமாக அமைந்திருந்தது.

அனைத்தையும் சீரணித்தவாறு, காலம் முன்நகரும் வேளை, நாங்களோ சிந்திக்க மறுத்து, இத்துப்போன காலாவதியான எண்ணங்களை, இன்னமும் வைத்துக் கொண்டு, தம் சொந்த நலனுக்காக பொய்யும் புரட்டும் கூறி எம்மைக் கொள்ளை அடிப்பவர்களை நம்பி வாழ்கின்ற நிலையில், காலத்தின் முரணியக்கத்தில் தடம்பதித்து, வரலாற்றில் நிலைபெற்ற ஆளுமைகளில் ஒருவரான விஸ்வானந்ததேவன் பதித்துச் சென்ற தடங்கள் மிக ஆழமானவை.

இதயநேர்மையுள்ள, உண்மையான ஒரு தலைவரை நாம் இழந்தது மட்டுமல்ல, வெறும் புத்தகவாதச் சிந்தனைக்கு அப்பால், நடைமுறைக்கான செயற் திறனை வலியுறுத்துகின்ற பண்பைக் கொண்டிருந்த, விஸ்வானந்ததேவனது இழப்பு அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். நாங்கள் மதித்துப் போற்றும் தலைவர்களே எங்கள் வளர்ச்சியின் அளவுகோல்.

தனது அனுபவத்திலிருந்து தொடர்ந்து கற்றுக்கொண்டு, அர்ப்பணிப்போடு செயலாற்றி, நிதானமிக்கவராக, மக்களை நேசித்த பண்பு மிக்கவராக, இதய சுத்தியுடன் உளப்பூர்வமாக அயராது போராடிய விஸ்வானந்ததேவனது வாழ்வு, மரணத்தை வென்றுவிட்டது மட்டுமல்ல, "விசு"என்று அநேகரால் அறியப்பட்ட விஸ்வானந்ததேவன், சரித்திரத்தில் ஒரு மறுதலிக்க முடியாத, பிரதிமையாக மிளிர்கின்றார்

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>