
நெடுந்தீவில் வரட்சி காரணமாக குதிரைகள் பல உயிரிழக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளமை யும் உரிய பராமரிப்பு இன்மையினால் ஆகும் என குற்றம் சுமத்துகின்றனர்.
இப்பகுதியில் குதிரைகள் இறப்பதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளோ அன்றில் அவற்றை பராமரிப்பதற்கான உருப்படியான எச்செயற்பாடுகளோ வனஜீவராசிகள் திணைக்களத்திரால் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கும் மக்கள் திணைக்களத்தினர் இவ்விடயத்தில் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த நெடுந்தீவுக் குதிரைகள் போத்துக்கேயரது ஆட்சிக் காலத்தில் அவர்களால் எடுத்துவரப்பட்ட குதிரைகளின் வழித்தோன்றல்களாக காணப்படுவதுடன் மிக நீண்டகாலமாக நெடுந்தீவில் வாழ்கின்றமையினால் இக்குதிரைகள் இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒரு ரகமாக உயிரியலாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இக்குதிரைகள் சுற்றுலாச் சிறப்பு மிக்க நெடுந்தீவில் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற உயிரியற் சொத்தாகவும் உள்ளது. மேலும் அங்கு காணப்படும் குதிரைகளை அப்பகுதி மக்கள் சவாரி செய்வதற்கும் மாடுகள் கலைப்பதற்கும் பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த குதிரை இனங்களை பாதுகாக்க முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையிலான ஒரு குழுவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக.னேஸ்வரன் நியமித்திருந்தார். இக்குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் வை.தவநாதன் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் நெடுந்தீவு பிரதேச செயலர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இவர்களும் ஏலவே குதிரைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்த நிலையில் எந்த வேலைத்திட்டமும் ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லை.
இக்குதிரைகள் பாதுகாக்கப்பட்ட மரபுரிமைச் சொத்தாக தேசிய மரபுரிமைத் திணைக்களத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இக்குதிரைகளை வேறிடங்களுக்கு கொண்டு செல்வதுசட்டவிரோதமாகும்.
ஆனால் ஒரு சிலரினால் இவை கடல் மார்க்கமாக கடத்திச் செல்லப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். இதே போன்று நெடுந்தீவுக்கே உரித்தான இவ்வாறான குதிரைகள் இவ்வாறு தொடர்ச்சியாக வேறுபகுதிகளுக்கும் கடத்தபட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்படுகிறது.
உல்லாசப் பயணிகளுக்கான கேந்திர நிலையமாக நெடுந்தீவை மாற்றுவதற்கான நடவடிக்கைகளைதொல்பொருள் திணைக்களத்தினரும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் இக்குதிரைகளின் நலன்களில் எவ்வித அக்கறையும் செலுத்தியதாக தெரியவில்லை.
தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வறண்டு போய் இருக்கின்றன.குதிரைகளுக்கு குடிப்பதற்கு நீர் இல்லாமலும் மேய்ச்சலுக்கென போதிய புல் இல்லாமலும் குதிரைகள் இறப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.
மிக நீண்டகாலமாக நெடுந்தீவில் வாழுகின்ற குதிரைகள் இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒரு ரகத்தைச் சேர்ந்தது என அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 50 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட சுற்றுலா சிறப்பு மிக்க நெடுந்தீவில் 400க்கும் மேற்பட்ட குதிரைகள் இருப்பதாகக் கணிப்பிடப்பட்டிருக்கின்றது





