தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியில் உள்ள சில உள்ளுராட்சி சபைகளின் வரவு-செலவுத் திட்டம் ஆளும் கட்சியினராலேயே தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், இனிமேலும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் உறுப்பினர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்வதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றபோதே இதற்கான தீர்மானமும் நிறைவேற்றபட்டுள்ளது.
இது மட்டுமல்லாது அவர்கள்மீது கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் எனவும் கூட்டமைப்பின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா எச்சரித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள உள்ளுராட்சி சபைகளின் வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட மற்றும் சமர்ப்பிக்க முடியாத நிலையில் உள்ள தலைவர்கள் நேற்றய கூட்டத்தில் கலந்துகொண்டு நிலைமைகளை விளக்கியதை தொடர்ந்தே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டமைப்பினரின் வசமுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் வரவு-செலவுத் திட்டங்களை கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், ஆளும் கட்சியில் உள்ள அனைவரும் ஆதரித்தே ஆகவேண்டும் என தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களால் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.