.jpg)
2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாலஸ் தீனத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்ற பாலஸ்தீன வர்த்தக பிரமுகர்களை சந்தித்துள்ளார். வர்த்தக தொடர்புகளை விஸ்தரிப்பதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் இச்சந்திப்பு பாலஸ்தீன பிரதமர் கலாநிதி ராம் ஹம்ரல்லாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இச்சந்திப்பானது இருதரப்பு நல்லுறவுகளை மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்குமென பாலஸ்தீன பிரதமர் தெரிவித்தார். ஆசியாவில் பொருளாதார ரீதியாக துரித வளர்ச்சியடைந்து வரும் 2 வது நாடு இலங்கையாகும். இலங்கைக்கு வருகை தந்து சேவை மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட துறைகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாக அறிந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாலஸ்தீன வர்த்தக சமூகத்திடம் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார்.
அத்துடன் இலங்கை மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் கூட்டு வர்த்தக சபை யொன்றை ஆரம்பிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக பாலஸ்தீன தனியார் துறையின் இணைப்பு செயலாளர் மொஹமட் மஸூஜி இச்சந்திப்பின்போது சுட்டிக்காட்டினார். பாலஸ்தீன தேசிய பொருளாதார ஊடக அமைப்பின் பிரதிநிதி ஜவாட் நாஜி, இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் கலாநிதி அன்வர் எல் அஸா உள்ளிட்ட பலரும் இச்சந்திப்பின் போது இணைந்திருந்தனர்.