பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்துடன் அவரது உடலம் வைக்கப்பட்டுள்ள யாழ்.போதனாவைத்திய சாலையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது இரண்டு கல்லூரிகளின் பழைய மாணவர்களுக்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனையடுத்தே கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரியின் பழைய மாணவனான செட்டியார்தெரு யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த ஜெயரட்னம் தர்ஷன் அமல்ராஜ்(வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பழைய மாணவனது உடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதால் அதனை காண வந்துள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களால் வைத்தியசாலையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் யாழ்.போதனா வைத்திய சாலையில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர் இது மட்டுமல்லாமல் போட்டி நடைபெற்ற வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்நெல் மைதானப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இது மட்டுமல்லாமல் குறித்த சம்பவத்தடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 4 பழைய மாணவர்கள் தப்பி யோடியுள்ள போதிலும் அவர்களுடைய மேட்டார் சைக்கிள்கள் பொலிசாரால் மீட்கப்பட்டு வட்டுக் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.