![](http://1.bp.blogspot.com/-CmKxGVKe0cI/UykaYavb9qI/AAAAAAAAA8g/rFRJx8-exbY/s320/malasiya.jpg)
இருப்பினும் இந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் 25-க்கும் மேற்பட்ட நாடுகள் களத்தில் உள்ளன. கடைசியாக வெளியான தகவல், கோலாலம்பூரில் இருந்து பீஜிங் செல்லும் பாதையில் இருந்து அந்த விமானம் திரும்பி, ரேடார் திரையில் இருந்து மறையும் விதத்தில், 'டெர்ரெயின் மாஸ்கிங்'என்னும் அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, 5 ஆயிரம் அடிக்கும் தாழ்வாக செலுத்தப்பட்டுள்ளது என்பதாகும்.
விமானப்போக்குவரத்தில் நிபுணத்துவம் படைத்த ஒரு நபரே இதை செய்திருக்க முடியும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், மலேசிய விமானம் வெடித்துச் சிதறியதாகவோ, மோதியதாகவோ தகவல் இல்லை என்று வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு, ஐ.நா.வின் ஆதரவுடன் செயல்படுகிற 'சி.டி.பி.டி.ஓ.'என்னும் முழுமையான அணு சோதனை தடை உடன்பாட்டு அமைப்பு கூறி உள்ளது.
இதை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரீக் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'காணாமல் போன மலேசிய விமானம் வெடித்து சிதறியதாகவோ, தரையிலோ தண்ணீரிலோ மோதியதாகவோ கண்டறியப் படவில்லை என வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிற முழுமையான அணு சோதனை தடை உடன்பாட்டு நிறுவனம் உறுதி செய்துள்ளது'என்றார்.
மேலும், 'தனிப்பட்ட சூழல்களின் அடிப்படையில், சி.டி.பி.டி.ஓ.வின் சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் மூலமாக விமான விபத்துக்கள் 3 அல்லது 4 தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்படலாம். அணு குண்டு சோதனை தடை ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக,'சி.டி.பி. டி.ஓ. நெட்வொர்க்'கில் அணு குண்டு வெடிப்புகளையும், பூகம்பங்களையும் கண்டறிவதற்கு உலகமெங்கும் மிகவும் ஆற்றல் வாய்ந்த சென்சார்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அணு குண்டு வெடிப்புகளை கண்டுபிடிக்க இந்த அமைப்பை நிறுவி இருந்தாலும், பெரிய விமானங்கள் வெடித்துச் சிதறுவதையும், தண்ணீரிலோ தரையிலோ மோதுவதையும் கூட இது கண்டுபிடிக்கும்'எனவும் ஸ்டீபன் துஜாரீக் தெரிவித்தார்.
இதற்கிடையே விமானம் மாயமானது தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக மலேசியா தங்களை அழைக்கவில்லை என்று அமெரிக்காவின் உளவுப்படை 'எப்.பி.ஐ.'அறிவித்துள்ளது. இதை மலேசியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக கோலாலம்பூரில் மலேசிய போக்குவரத்து மந்திரி ஷாமுதீன் உசேன் கூறுகையில், 'நான் எப்.பி.ஐ.யுடன் தொடர்பில் இருக்கிறேன். எப்.பி.ஐ. ஆட்கள் நிலவரம் பற்றி எங்களுக்கு தெரியாது. இதில் உதவுவதற்கு கூடுதல் வல்லுனர்கள் தேவைப்படுகிறார்களா என்பது பற்றி அவர்கள் தான் எங்களுக்கு சொல்ல வேண்டும்'என்று தெரிவித்தார்.