
இந்திய பெண் தூதர் அமெரிக்காவில் கைது செய்யப் பட்டதோடு, ஆடை களையப்பட்டு சோதனையிடப்பட்டு அவமதிக்கப்பட்டதற்கு பதிலடியாக, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அடையாள அட்டைகளை ஒப்படைக்க இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க்கில் இந்திய தூதரகத்தில் துணைதூதராக இருக்கும் தேவயானி கோபர்கடே, பணிப்பெண்ணை வரவழை த்ததில் விசா மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது குழந்தைகளை பள்ளியில் சென்று விடும்போது அவர் பொது இடத்தில் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். இதற்கு இந்தியா சார்பில் டெல்லியில் உள்ள தூதரக அதிகாரியை நேரில் வரவழைத்து கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது.
இதனிடையே தேவயானி கைது செய்யப்பட்ட பின்னர் ஆடை களையப்பட்டு சோதனை செய்யப்பட்டதாகவும், தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது இந்திய அரசு தரப்பில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தேவயானி ஆடை களையப்பட்டு சோதனையிடப்பட்டதற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும், கைது செய்யப்பட்டதும் அவர் அமெரிக்க சட்டவிதிகளின்படி பொலிஸ் மற்றும் நீதித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், விதிமுறைகளின்படியே அவரை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியதாகவும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இந்தியா இதனை ஏற்கவில்லை. ஒரு தூதரக அதிகாரியை எப்படி நடத்த வேண்டும் என்ற மரபுக்கு மாறாக அமெரிக்கா நடந்துகொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவில் இயங்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கபட்டிருந்த பல்வேறு சலுகைகளை பறித்து மத்திய அரசு அதிரடியாக புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் தங்களது நாட்டில் வழங்கப்பட்டுள்ள அனைத்து அடையாள அட்டைகளையும் மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவில் பணிபுரியும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அடையாள அட்டைகள் தாக்கல் செய்வதில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து அமெரிக்க தூதரக மற்றும் துணைத் தூதரகங்களில் பணிபுரியும் அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த விமான நிலையங்களுக்கு செல்வதற்கான ஏர்போர்ட் பாஸ்களை இந்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. அத்துடன் அமெரிக்க துணை தூதரகங்களில் பணிபுரியும் அனைத்து இந்திய பணியாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட விவரங்களையும், தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினரை பற்றிய விவரங்கள் மற்றும் அவர்களது இல்லங்களில் பணிபுரியும் வேலையாட்கள் மற்றும் அவர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட விவரங்களையும் அளிக்குமாறும் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து சரக்குகளுக்கான கிளியரன்ஸ்களையும் மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது , டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே போடப்பட்டிருந்த அனைத்து போக்குவரத்து தடுப்புகளும் நீக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் விசா மற்றும் இதர விவரங்களையும் அளிக்குமாறு கேட்டுள்ளதோடு, இந்த பள்ளிகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் மற்றும் வங்கி கணக்குகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது.
இதனிடையே டெல்லியில் இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தேவயானியை காட்டுமிராண்டித்தனமாக கைது செய்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கூறினார். மேலும் இந்திய தூதர் அவமதிக்கப்பட்ட செயலுக்கு அமெரிக்கா மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே இந்தியா வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவை இன்று சந்திப்பதாக இருந்தது. ஆனால் அந்த சந்திப்பு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. ஷிண்டே நாடாளுமன்ற பணிகளில் மிகவும் பிசியாக இருப்பதாகவும், அதனால் அக்குழுவை சந்திக்க முடியவில்லை என்றும் காரணம் கூறப்பட்டுள்ளது. ஆனால் நேற்று மாலை ஷிண்டேயின் அலுவலக பணி பட்டியலில் அமெரிக்க குழுவை இன்று சந்திப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்திய தூதர அவமதிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக மக்களவை சபாநாயகர் மீராகுமார், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரும் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினருடனான தனது நேற்றைய சந்திப்பை ரத்து செய்தனர். இந்திய தூதர் மோசமாக நடத்தப்பட்டதை கண்டித்தே அவர்களை சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே தன்னை சந்திக்க விரும்பிய அமெரிக்க காங்கிரஸ் குழுவை சார்ந்த மூத்த உறுப்பினர்களை சந்திக்க குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியும் மறுத்துவிட்டார். நமது நாட்டின் ஒற்றுமையை உணர்த்தவும், நமது நாட்டின் பெண் தூதர் தவறான முறையில் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாகவே அமெரிக்க காங்கிரஸ் குழுவை சந்திக்க மறுத்துவிட்டதாக மோடி தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.
மேற்கூறிய நடவடிக்கைகள் காரணமாக இந்தியா - அமெரிக்கா இடையேயான தூதரக உறவில் மோதலும், விரிசலும் ஏற்பட்டுள்ளது. தனது தூதர் உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கும் அமெரிக்கா, பிற நாட்டு தூதரக அதிகாரிகளை அவ்வாறு நடத்துவதில்லை என ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.