Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7879

காசி ஆனந்தன் தமிழ் மக்களிற்கு வைக்கும் கண்ணிவெடி.

$
0
0
இயக்குனர், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா மறைந்த நேரம் காசி ஆனந்தன் "இலங்கையின் சுதந்திர நாளை பகிஸ்கரிக்க வேண்டி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஒரு மட்டக்களப்பு கல்லூரிக்கு மிதிவண்டியில் தானும் பாலு மகேந்திராவும் சென்று வெடிகுண்டு வீசியதாக"குறிப்பிட்டார். அன்று கல்லூரிக்கு வெடிகுண்டு வீசியவர் இன்று "இந்தியாவை எமது விடுதலைப் போராட்டத்திற்கு துணையாக இருக்க வேண்டுமென்று ஆசையுடனும், அவாவுடனும் கேட்டுக் கொள்ளுவதாக"கேட்டு இலங்கைத் தமிழ்மக்களின் மேல் வெடிகுண்டு வீசுகிறார்.

இந்தியாவின் துணை, தமிழ்நாட்டின் ஆதரவு என்று இவரும், இவர் போன்றவர்களும் குறிப்பிடுவது பெரும்பான்மையான இந்திய ஏழை மக்களின் துணையை அல்ல, தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களின் ஆதரவை அல்ல. பெருமுதலாளிகளுடன் சேர்ந்து தமது இலாப வேட்டைக்காக தமது சொந்த நாட்டின் கோடானுகோடி மக்களையே வறுமையில் வாழ விதித்திருக்கும் இந்தியாவை ஆளும் கொள்ளைக்கார அரசுகளிடம் தான் தான் அவர் உதவி கேட் கிறார். நதிகளையும், காடுகளையும், மலைகளையும், கடல்களையும், கழனிகளையும் அன்னியப் பெருமுதலாளிகளிற்கு விற்று நாட்டை அழிக்காதே, இயற்கையை சிதைக்காதே என்று போராடும் ஏழை மக்களிற்கு எதிராக படைகளை கட்டவிழ்த்து விட்டு கொலை வெறியாடும் கொடிய அரசியல்வாதிகளிடம் தான் இலங்கைத் தமிழ்மக்களிடம் கருணை காட்டச் சொல்கிறார்கள்.

தமது ஊழல்களினால் உலகப்புகழ் பெற்ற தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளிடம் தான் அவர் உதவி கேட்கிறார். இந்திய மத்திய அரசு அகில இந்திய அளவில் கொள்ளை அடித்தால், கொலை செய்தால் நாங்கள் மாநில மட்டத்தில் தமிழ் மண்ணை கொள்ளை அடிப்போம், தமிழ் மக்களை கொலை செய்வோம் என்கிற கயவர்களின் காலில் விழுந்து எழுகிறார்கள். தண்பொழில் தாமிரபரணியை கொக்கோ கோலாவிற்கு விற்று தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாமல் போகச் செய்யும் தன்னினம் தின்னிகள் கடல் தாண்டி வந்து நம் மக்கள் கண்ணீர் துடைப்பார்களாம். தம் அடங்கா பணப்பசிக்காக சாராயம் விற்று ஏழைக் குடும்பங்களைக் கொல்லும் தமிழ்நாட்டின் கொலைகார பேய்கள் நம் மக்கள் துயர் துடைப்பார்களாம் உணர்ச்சிக்கவிகள் உளறுகிறார்கள்.

"நாங்கள் இன்றைக்கில்லடா, அன்றைக்கிருந்தே ரெளடிகள் தான்"என்பது போல அண்ணன் ஒரு அரிய வரலாற்றுச் செய்தியை எடுத்து விடுகிறார். அவர் 1963 இல் சென்னையில் இலங்கைத் தூதரகத்தின் முன் உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொண்ட போது அதை முடித்து வைப்பதற்கு ராஜாஜி என்று அழைக்கப்பட்ட சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியை அழைத்தாராம். காங்கிரஸ் என்ற கயவர்களின் கட்சியில் இருந்து விட்டு நேரு காட்டிய போலி முற்போக்கு முகத்தைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் முன்னாள் மன்னர்களுடனும், தீவிர வலதுசாரிகளுடனும் சேர்ந்து "சுதந்திரா கட்சியை"தொடங்கிய ராஜாஜியை தான் அவர் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க கூப்பிட்டாராம். "குலக்கல்வித் திட்டம்"என்று அவரவர் சாதித்தொழிலை செய்ய வேண்டும் என்ற பார்ப்பனிய நஞ்சை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது கல்வித் திட்டமாக கொண்டு வர முயற்சித்த குல்லுக பட்டரைத் தான் அவர் கூப்பிட்டிருக்கிறார்.

இவர் உண்ணாவிரதம் இருந்த ஆண்டில் ஈரோட்டுக் கிழவன் ராமசாமி உயிரோடு தான் இருந்தான். தளர்ந்த உடலுடன் ஆனால் தளரா நெஞ்சுடன் மக்களின் விடுதலையையும், பச்சைப் பொய்யர்களிற்கு எதிரான பகுத்தறிவையும் தன் தோழர்களுடன் பேச்சிலும், செயலிலும் பரப்பி வந்தான். இந்திய சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் வேண்டி போரிட்ட எத்தனையோ முற்போக்காளார்கள் இருந்தார்கள். காங்கிரசில் இருந்தாலும் ஏழை மக்களிற்காக குரல் கொடுத்த, செயற்பட்ட காமராசர், கக்கன் போன்றவர்கள் இருந்தார்கள். "தமிழ்த் தேசியத்தின் தந்தை"என்று அழைக்கப்பட்ட பெருஞ்சித்திரனார் இருந்தார். ஆனால் இலங்கைத் தமிழ்மக்களின் பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு செல்ல இவர்களை எல்லாம் விட்டுவிட்டு பார்ப்பன வெறியரும், படுபிற்போக்காளருமான ராஜாஜி தான் அண்ணனின் கண்ணில் பட்டார். இந்தி மொழியை தமிழ்நாட்டில் கட்டாயப்பாடமாக கொண்டு வந்தவரைத் தான் "சிங்களம் மட்டும்"என்ற சிங்கள இனவாதசட்டத்தை இலங்கைத் தமிழ்மக்களின் மேல் கொண்டு வந்தவர்களிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைக்க மிகப் பொருத்தமாக கூப்பிட்டாராம்.

"சக்கரவர்த்தி திருமகன்"என்று ராஜாஜி ராமாயணத்தை கல்கியில் வாராவாரம் எழுதி இந்துத்துவ நஞ்சை பரப்பினார் என்றால் அண்ணன் காசி ஆனந்தன் "இந்து தமிழீழம்"அமைத்துத் தாருங்கள், நாங்கள் ஒத்துழைக்கிறோம்; நாங்க ரெடி, நீங்க ரெடியா என்று டீல் போடுகிறார். "இன்று டெல்கியில் உள்ள உண்மையான இந்து சமய உணர்வுள்ளவர்களிடம் அவர் உணர்வுபூர்வமாக கேட்கிறாராம், என்ன கொடுமை இது காசி அண்ணா. குஜராத்தில் கொலை செய்த உண்மையான இந்து சமய உணர்வாளர் மோடியிடம், இன்று இந்தியா முழுவதும் முற்போக்காளர்களைக் கொலை செய்யும் இந்துவெறியர்களிடம், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களையும், சிறுபான்மை மதத்தினரையும் கொலை செய்யும் இந்துவெறியர்களிடம், இந்த மதவெறியர்களிற்கு எதிராக போராடும் மாணவர்களை "தேச விரோதிகள்"என்று சிறையில் அடைக்கும் பாரதிய ஜனதா பண்டாரங்களிடம் அண்ணன் கேட்கிறார் "இந்து தமிழீழம்"அமைத்து தாருங்கள்.

அம்பேத்காரும் அவரது இயக்கத்தினரான ஒடுக்கப்பட்ட மக்களும் இந்த இந்துமதத்தில் இருந்து விலகினார்கள் என்று அண்ணனே அவரது பேச்சில் குறிப்பிடுகிறார். அவர்கள் எதற்காக இந்து மதத்தை விட்டு விலகினார்கள் என்று அண்ணன் ஒரு நிமிடமாவது யோசிக்கக் கூடாதா? பிறப்பில் இருந்து இறப்பு வரை மனிதர்களை பிரிக்கும், இழிவுபடுத்தும் இந்த இந்து மத சாக்கடையில் இருந்து அவர்கள் கரையேற வேண்டும் என்பதற்காகவே அவர்கள் மதம் மாறினார்கள் என்பது அண்ணனிற்கு தெரியவில்லையா?

பார்ப்பனிய இந்துமதத்தின் பாதிப்பு இல்லாததாலேயே காசி ஆனந்தனின் சொந்த மாவட்டமான மட்டக்களப்பில் சாதிக்கொடுமை ஒப்பீட்டளவில் இல்லை. வேடுவரும், வேளாளரும், முக்குவரும், திமிலரும், தட்டாரும், அம்பட்டரும், சேணியரும் சமமாக வாழும் சமுதாயத்தை அழித்து பிராமணன் பிரமனின் தலையில் தோன்றினான் எனவே தலையில் வைத்து கொண்டாட வேண்டும் என்ற முட்டாள்தனத்தை சொல்லும் மக்கள்விரோத இந்துசமயத்தை கொண்டுவர வேண்டும் என்று அழிவு அரசியலை சொல்லும் இவர்களை கவிஞர்கள், தமிழ் மக்களிற்காக பேசுபவர்கள் என்பது கொடுமையிலும் கொடுமை.

இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்த ஆக்கிரமிப்பு படை தமிழ் மக்களை கொலை செய்தது. எம் பெண்களை கொடுமைப்படுத்தியது. தாய்மாரை, தந்தையரை இந்தக் கொலைகாரர்கள் கொன்றதினால் எம் குழந்தைகள் தனியே விடப்பட்டார்கள். கணவரை, காதலரை இழந்து பெண்கள் இன்று வரைக்கும் கண்ணீரில் வாழ்கிறார்கள். ஊர்கள் கொளுத்தப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. மக்கள் அகதிகளாக்கப்பட்டு தம் மண்ணை விட்டு தவிக்க விடப்பட்டனர்.

நேரில் வந்து இவ்வளவு கொடுமைகளைச் செய்தவர்கள் மகிந்த ராஜபக்ச என்ற இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கொலைகாரனிற்கு ஆயுதங்களும், ஆலோசனைகளும் கொடுத்து வன்னிப் படுகொலையை செய்து முடித்தார்கள். இவர்களைத் தான் தமிழ்மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க காசி ஆனந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் "தேச பக்தர்கள்"போன்ற காட்டிக் கொடுப்பாளர்கள் மறுபடியும் வந்து தமிழ் மக்களைக் கொல்லுங்கள் என்கிறார்கள். விடுதலையின் பாடலை பாடும் துரோகிகளின் குரலை கண்டு கொள்வோம். கூப்பிய கரங்களிற்குள் கொடு வாட்களை ஒளித்திருக்கும் கொடியவர்களின் முகமூடிகளை கிழித்தெறிவோம்.

Viewing all articles
Browse latest Browse all 7879

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


சென்ற வார பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்!


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


சோழர் பாசன திட்டம் என்றால் என்ன? அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை-பின்னணி...


வெண்முரசு- குருபூர்ணிமா சிறப்புச் சலுகை


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>