Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

நம் முன்னோர் அளித்த அருஞ் செல்வம். (பகுதி 1) வ.அழகலிங்கம்.

$
0
0
உலகிலுள்ள ஒவ்வொரு தாயும் ஓர் அதி அழகான குழந்தையைப் பெறுகிறாள். தமிழ்த் தாயும் தமிழ் என்ற அழகான குழந்தையைப் பெற்றாள். வழமான சமூகவாழ்க்கை என்பது அரசியற் கோரிக்கைகள், சமூகநலக் கோரிக்கைகள், பொருளாதாரக் கோரிக்கைகள் என்ற மூன்று ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த கோரிக்கைகளால் ஆனது.

* பிரஜாவுரிமை, வாக்குரிமை, மொழியுரிமை, சுயநிர்ணயவுரிமை போன்றன அரசியற்கோரிக்கைகளாகும்.

* இலவசவைத்தியவசதி, இலவசக்கல்வி, வதிவிடவசதி, வயதானகாலத்து ஓய்வூதியம், பிரசவகாலத்து ஓய்வு என்பன சமூகநலக் கோரிக்கைகளாகும்.

* சம்பளஉயர்வு, வரிகுறைப்பு, பணவீக்கத் தடுப்பு, 8 மணி வேலை,அதிக பணப்புழக்கமும் சந்தையில் பற்றாக்குறை ஜீவனப் பொருட்களும், பற்றாத பணப்புழக்கமும் உபரி வினியோகப் பொருட்களும் ஏற்காமை போன்றன பொருளாதாரக் கோருக்கைகளாகும்.

இந்த மூன்று கோரிக்கைகளில் ஒன்றின் அழிவில் மற்றொன்றை வெல்வது அல்லது ஒரு கோரிக்கையை மாத்திரம் உயர்த்திப் பிடிப்பது அரசியற் பிழையாகும்.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று"என்றது சிலப்பதிகாரம். இங்கு சொல்லப்படும் "அறம்"என்பது என்ன?

ஏன் சிலகாலங்களில் அணைகடந்த காட்டாற்று வெள்ளம்போல ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கான பொறுமையிழந்த மக்கள் ஒன்று திரண்டு அரசுகளுக்கு எதிராகத் தன்னிச்சையாகக் கிளர்ந்தெழுந்து போராடுகிறார்கள் என்று சிந்திக்கக் கார்ல் மாக்ஸ் தலைப் பட்டார். ஈற்றில் மக்களின் வாழ்நிலமைகளே மக்களின் சிந்தனையைத் தீர்மானிக்கின்றனவே ஒழிய மனிதர்களின் சிந்தனைகள் மனிதர்களின் வாழ்நிலமைகளைத் தீர்மானிப்பவை அல்ல என்று முடிவுக்கு வந்தார். சிந்தனைகள், போதனைகள், சட்டங்கள் என்பன வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்று மனோமூலவாதிகளே எண்ணுவார்கள்.

பசி, பட்டினி, பஞ்சம், கடன்சுமை, கொடியவரிச்சுமை, வீடின்மை வேலையில்லாத் திண்டாட்டம், உற்பத்தியின்மை, நோய்கள், பயம், எதிர்காலத்திற்கான உத்தரவாதமின்மை, இயற்கை அனர்த்தங்களிலிருந்தும் மீள வழியின்மை, பகைவர்களின் பயம், யுத்தம் போன்றன நாட்டில் நிலவும் தருணங்களிலே மக்கள் சட்டத்திற்கோ, வாழையடி வாழையான வழக்கங்களுக்கோ கட்டுப்பட மாட்டார்கள். சட்டம,; நீதி, நானாவித மனிதஉரிமைகள் எல்லாமே மக்களை ஏதோ ஒரு விதத்தில் வாழ வழிவிட்டால் மாத்திரம்தான் செல்லுபடியாகும். எல்லா உரிமைகளுமே பொருளாதாரத்திற்குக்; கட்டுப்பட்டது. ஜனனாயகமோ சர்வாதிகாரமோ வாழ வழிவிட்டால் மாத்திரமதான்; செல்லுபடியாகும். இல்லையேல் மக்கள் கிளர்ந்து எழுவார்கள். இதுவே சிலப்பதிகாரம் சொன்ன அரசியல் பிழைத்தோர்க்கு ஷஅறம்| கூற்று என்பதுவாகும்.

அரசியல் என்பது பொருளாதாரத்தின் செறிவாகும். திரட்சியாகும். ஒட்டுமொத்தமாகும். சிலகாலகட்டங்களில் வெகுசனங்கள் ஓரிரு பிரச்சனைகளுக்கு எதிராக மட்டும் போராட மாட்டார்கள். ஒட்டுமொத்த எல்லாப் பிரச்சனைகளுக்கும் எதிராகவும் போராடுவார்கள். ஒடுக்குமுறைகள் எல்லாவற்றிற்றிற்குமெதிராக அவை எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் அவைகளுக்கு எதிராகப் போராடுவார்கள். இதுவே வெகுசன எழுச்சி வடிவத்தை எடுக்கிறது. இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகத் திரண்ட சமூகமூரண்பாடுகளைத் தீர்க்க வேண்டிய காலங்கனிந்ததால் எழுவதாகும். இந்த எழுச்சிகளின் போது புதியதொரு சமுதாயம் ஏற்படாவிட்டால் நாட்டில் காட்டுமிரண்டித்தனம் முந்தயதிலும் பலமடங்கு கொடூரமாக நடந்தேறும். இதுவே வாழையடி வாழையான வரலாறுகளின் பொதுமைப் படுத்தலாகும்.

சிலப்பதிகாரம் என்னும் காவியம் ஏன் எழுந்தது? அதற்குக் காரணம், இளங்கோவடிகளே சொல்லுகிறார்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதூஉம்

எனும் மூன்று உண்மைகளை நிலைநாட்டுவதற்காக 'நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்'என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

"பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென
ஆதிரை யிட்டனள் ஆருயிர் மருந்தென்."என்று மணிமேகலை கூறிற்று.
ஆதிரை நல்லாள் ஆருயிர் மருந்தாகிய அன்னத்தை நிலவுலகம் முழுவதும் பசி நோய் அறுக என்று கூறி இட்டனள். ஆருயிர் மருந்து இட்டனள்.

உணவு என்பது உயிர்க்கு அமுது. பசி என்பதோர் பிணி. முதலிற்பசி என்ற பிணியை அகற்ற வேண்டும். வள்ளலாரோ, 'வீடு தோறும் இரந்து பசி அறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்'என்கிறார்.

ஒளவையோ, 'ஈயென பல்லைக் காட்டி இரந்து தின்பது இழிவானது, ஆனால் அவர்க்கு இல்லை என்று சொல்வது அதனைவிட இழிவானது'என்கிறார். உணவைப் பாழாக்குகிறவர் பெரும் பாவிகள். உணவை அனுபவிப்பதற்கு பசியே முக்கியமான தேவை. உலகம் பசியாமலே சாப்பிடும் நாடுகளாகவும் சாப்பிட்ட பின்பும் பசிக்கும் நாடுகளாகவும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

'வறியோர்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து'| என்கிறார் வள்ளுவர். இல்லாதவனுக்குக் கொடுப்பதே ஈகை. மற்றெல்லாக்; கொடுப்பனவும் பிரதிபலன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது. கைம்மாறு கருதாத உதவியே உதவி. மற்றெல்லாம் றால் போட்டுச் சுறா பிடிப்தாகும.

'பசிப்பிணி, ஒருவரின் குடிப்பிறப்பினால் வந்த தகுதியை அழித்துவிடும். நற்குணங்களைச் சிதைத்து விடும். வாழ்வுக்குப் பற்றுக்கோடாகப் பற்றிக்கொண்ட கல்வியாகிய நல்லாண்மையைப் போக்கிவிடும். நாணமாகிய அணிகலனையும் நீக்கிவிடும். மேன்மைபொருந்திய அழகினை எல்லாம் சீர்குலைக்கும். மனைவியோடு சென்று பிறரிடம் பிச்சை எடுக்க வைக்கும். அத்தகைய பசி என்ற பாவியாகிய கொடுமையை முதலிற்போக்க வேண்டும். அங்ஙனம் போக்கியவர்களது புகழை அளவிட்டுக் கூற எந்த நாவாலும் முடியாது.

கடன்பட்டார் நெஞ்ஞம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்
-என்றான் கம்பன்.

கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன்பட்டவர்கள் படும் கஷ்டத்தை இராவணனுக்கு உவமையாகச் சொல்கிறார் கம்பர். கடன் காலைச் சுற்றிய பாம்பு போல என்பார்கள். காலைச் சுற்றிய பாம்பிடம் இருந்து தப்புவது சிரமம்.

'விடம்கொண்ட மீனைப்போலும் வெந்தழல் மெழுகு போலும்
படம்கொண்ட பாந்தள்வாயிற் பற்றிய தேரை போலும்
திடம்கொண்ட இராமபாணம் செருக்களத் துற்ற போது
கடன்கொண்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்.'

கம்பன் உயர்வு நவிர்ச்சி அணியின் உச்சக் கட்டத்திற்குப் போபவன். பெற்றோரை இழந்த கலக்கம், பிள்ளைகளை இழந்த கலக்கம், தாரத்தை இழந்த கலக்கம,; காதலை இழந்த கலக்கம், தாய் நாட்டை இழந்த கலக்கம் என்பனவெல்லாம் சின்னக் கலக்கங்கள். இந்தியாவிலே வருடாவருடம் முப்பதுனாயிரத்திற்கு மேலான விவசாயிகள் வங்கிக் கடனைக் கட்ட வக்கில்லாததால் தற்கொலை செய்து கொண்டார்கள். இலங்கையிலே சில வருடங்களுக்கு முன்னர் கேகாலை என்ற ஒரேயொரு மாவட்டத்திலேயே 380 விவாசாயிகள் வங்கிக் கடன் கட்ட வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டார்கள். கம்பனுக்கு உலகிலேயே பெரிய கலக்கம் கடன் பட்டவர்க்கே உண்டு என்பதாகும்.

இன்றய யதார்த்தம் மக்கள் மட்டும் கடனால் நசிபடவில்லை. அரசாங்கங்கள், வங்கிகள் போன்றன எல்லாமே கடனில் அமிழ்ந்தியுள்ளன. உலகின் பெரிய கடனாளி ஐக்கிய அமெரிக்கா. இலங்கையின் மொத்தக் கடன் வருடாந்த உற்பத்தியிலும் மூன்று மடங்கு. பட்டகடனுக்கான வட்டியைக் கட்ட வரியாற் கிடைக்கும் அரச வருமானம் போதாது. கஜான எப்பொழுதுமே காலி. அதனோடு கூட அரசாங்கம் அச்சடித்து விற்ற 'பொண்ட்"என்று சொல்லப்படும் உறுதிப் பத்திரங்கள் (தரலாம் கடன்)ஒரு கொள்ளை. சிறீலங்கா எப்போது பட்டகடனை இறுக்கமாட்டேன் என்று சொல்கிறதோ ஆரறிவார் பராபரமே. ஓர் அரசு கடனாளியாகி விட்டால் அந்த நாட்டை அழிக்க வெளியில் இருந்து ஒரு பகை வரவேண்டிய அவசியமில்லை. கறையான் பிடித்த வேலிபோலத் தானே அந்த அரசு அழிந்துவிடும்.

'...நீணிலம் ஆளும்
அரசர் தாமே அருளறம் பூண்டால்
பொருளும் உண்டோ, பிறபுரை தீர்த்தற்கு!
..அறமெனப் படுவது யாது எனக் கேட்பின்
மறவாது இது கேள்ளூ மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும் அல்லது
கண்டதுஇல்| எனக்-,,(மணி 24-225-230).

பெரிய நாட்டை ஆளும் பொறுப்புடைய அரசர் தாமே அருளற வொழுக்கத்தினை மேற்கொண்டால், உலகின் பிற குறைபாடுகள் போவதற்கு ஏற்றன செய்யுமோர் வேறு வழியும் உளதாமோளூ அறம் என்று சொல்லப்படுவது என்னவென்று கேட்பாயாயின், மறந்துவிடாமல் யான் சொல்லும் இதனைக் கேட்பாயாக: மன் உயிர்களுக்கெல்லாம் உணவும், உடையும், தங்கும் இடங்களும் அளிப்பதன்றி, வேறு அறமென எதனையும் ஆன்றோர்கள் கண்டதில்லை.,,

'இதுவேதான் மேற்குலக நவீன பொருளியலின் அத்திவாரமாகும்.,, நவீன அரசாட்சிகளின் முக்கியமான அரசியற்கோட்பாடுகள் என்று சொல்பவைகளைத் தமிழிலக்கியங்கள் 2000 வருடங்களுக்கு முன்னரே சொல்லி வைத்தன. தமிழர் ஆட்சிகள் கடைப் பிடித்தன.

சீரோடு வாழ்ந்தோம் வேரோடு சாய்ந்தோம் என்பதைக் கண்டறிய வேண்டுமானால் தமிழுக்குள்ளேயே தேடவேண்டும்.

'தன் நிலமை தாழாமை தாழ்ந்த பின் வாழாமை,, என்பதே தமிழர் மூலதர்மம்.

நடந்த இடத்தில் தவழக் கூடாது என்பது பழந்தமிழர் சம்பிரதாயம்.

தங்களது கடந்த கால வரலாறு, தோற்றம், கலாச்சாரம் ஆகியவற்றை அறியாத மக்கள் வேரற்ற மரம் போன்றவர்கள் என்று மூதறிஞர் மார்க்கஸ் கார்வே கூறியுள்ளார்.

நடந்துவந்த பாதை தெரியாதவர்களுக்கு நடக்கப் போகும் பாதை தெரிய வராது. நடந்துவந்த பாதையை மறந்த தமிழர்கள் ஐரோப்பாவிலே அர்த்தராத்தியிற் குடைபிடிக்கிறார்கள்.

'அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு,,-என்கிறான் வள்ளுவன்.

ஒருவனுக்கு இல்லாமை எல்லாவற்றுள்ளும் மிகப்பெரிய இல்லாமை அறிவில்லாமையே ஆகும். மற்றப் பொருளில்லாமயை உலகத்தார் இல்லாமையாகக் கொள்ளமாட்டார்கள்.

பெரும்பாலான தமிழ் மக்களின் வாழ்வையும் வாழ்வியல் பண்புகளையும் நிகழ்வுகளையும் தன்னிடத்தே கொண்டதால்தான் சிலப்பதிகாரம், மகாகவி பாரதி சொன்னதுபோல இன்னும் நெஞ்சை
அள்ளிக்கொண்டிருக்கிறது. அது உலகிற் தோன்றிய முதலாவது குடிமக்கள் காப்பியம்.

ஞானம்பெற மிக எளிதான வழி ஒன்று உண்டு. அது நம் தாய்மொழியை மனம் படிந்து பயில்வதுதான். தெளிந்த மெய்ப்பொருள்களைக் கொண்ட தமிழ் ஞானத்தமிழ் ஆகும். நல்ல ஞானம், நல்ல காட்சி, நல்ல ஒழுக்கம் என்ற மும்மணிகளை வாழ்க்கை முன்நோக்காகக் கொண்டது தமிழர் பண்பாடு.

தமது தாய்மொழியை ஐயம்திரிபறக் கல்லாதவரிடம் கலாச்சாரமோ நாகரீகமோ இருக்கும் என்று சொல்லுவது கடினம். எம்தாய்மொழியாம் தமிழ் ஒரு வாழ்க்கை வழிகாட்டி. அரசியல் வழிகாட்டி. அறவியல் வழிகாட்டி. அந்தக்கால அறிவியல் வழிகாட்டி.

'அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.,,(503) என்கிறது குறள்.

சிறந்த அருமையான நூல்களைக் கற்றறிந்த குற்றங்கள் எதுவும் இல்லாதவர்களிடத்திலும் நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் அறியாமையென்பது இல்லாதிருப்பது அருமையோயகும்.

கற்றிந்த பேரறிஞர்களிடத்தும் ஏதாவாதொரு பலவீனம் இருக்கும். அதிமுட்டாளிடமிருந்தும் கற்றுக் கொள்ள ஏதாவது ஒன்றிருக்கும். உலகில் எந்த மனிதனும் உதவாக்கரையாகவோ பெறுமதியற்றவனாகவோ இல்லை. இயற்கையின் அதியுயர் படைப்பு மனித மூளை என்று ஹேகல் சொல்லுவார். உலகில் அதிஉயர் அழகான படைப்பு மனிதப் படைப்பே என்று உலகம் மெச்சிய ஓவியக் கலைஞர் பிக்காசோவின் கருத்தென்று கூறுவார்கள்.

திட்டினாலும் தமிழிலே திட்டு. அது தேவகானமாக எனது காதில் ஒலிக்கும் என்று அருணகிரிநாதர் கூறுவார்.

'அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே''என்று கொங்கணகிரி திருப்புகழ் கூறுகிறது.

மன வெம்மையை மாற்றித் தணிக்கும் மழைத்துளிகள்போல் குளிர்ந்த சொல் முத்துக்கள் தமிழில் நிரம்ப உள்ளன. "தண் தமிழின் மிகுநேய முருகேசா"என்று சிறுவாபுரி திருப்புகழிலும் "தண்தமிழ் சேர் பழனிக்குள் தங்கிய பெருமாளே"என்று பழனித் திருப்புகழிலும் வருகின்றன.

தமிழ்ச் சொற்கள் அமிழ்தினும் இனியன. பொருள் வளமும் அழகு நலமும் பொலிவன. அருணகிரிநாதர் நிம்பபுரம் திருப்புகழில் "வந்த சரணார விந்தமதுபாட வண்தமிழ் விநோதம் அருள்வாயே"என்று முருகனிடம் வேண்டுகிறார். வண்தமிழில் அற்புதக் கவிபாட அருள்செய்.

தமிழ் மொழியை ஆய்ந்து மெய்மை காணும் வழியை, அதன் நுட்பத்தைத் தந்து அருளு என்று அருணகிரிநாதர் வேண்டுகின்றார்.

ஆதி சிவன் பெற்ற தமிழ் அகத்தியன் வளர்த்த தமிழ் மொழிகளில் முற்பட்டது முதன்மையானது.

"முந்துதமிழ் மாலைக் கோடிக்கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி"என செந்தூர்த் திருப்புகழில் பாடியுள்ளார்.

தித்திக்கும் தமிழ் - இன்பத்தமிழ், இனிய தமிழ் எனப்படும். பொதியமலை முனிவனின் மனம் நனிமகிழ, அவர் புகழ், செவி குளிர இனிய தமிழை குமரன் பேசுகிறான்.

'சிவனை நிகர் பொதியவரை முனிவன் அகமகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே'

தமிழிலே பொதிந்துள்ள, அரசியற்கோட்பாடுகள், அரசியற்பொருளாதாரக் கோட்பாடுகளைக் காட்ட முனைவதுவே இந்தக் கட்டுரையின் நோக்குநிலையும் குறிக்கோளுமாகும்.


தொடரும்.....



Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!