Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

டாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்! பீமன்.

$
0
0
உளவியல் நிபுணர், சமூகசேவையாளர், பெண்ணியவாதி, வரலாற்ராய்வாளர், தமிழ் ஆர்வலர் என பல்வேறுவிதமாக டாக்டர் ஷாலினி அறியப்படுகின்றார். இவர் அண்மையில் கனடா சென்றார். அங்கே தமிழரின் பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்தார். தனது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவில் இறங்கிய அவர் கீழ்கண்டவாறு தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.:

எனது முழுப்பயணத்தைப்பற்றி எழுதுவதானால் அல்லது பேசுவதானால் அதற்கு வருடங்கள் தேவைப்படும். பல்வேறு பாடங்களையும், அவதானிப்புக்களையும், புரிதல்களையும் தந்ததோர் பயணமாகவே ரோறொன்டோவுக்கான பயணம் அமைந்திருந்தது. அவற்றில் சில முக்கியமான புள்ளிகளை குறிப்பிடுகின்றேன் என தனது அனுபவங்களை பதிவு செய்துள்ளார்.

தமிழ் நாட்டிலிருக்கின்ற எங்களுக்கு எல்ரிரிஈ என்பது ஒர் கதாநாயக அமைப்பு என்றும் பிரபாகரனே தமிழ் மக்களின் இறுதி அடையாளச்சின்னம் என்றும்தான் தெரியும். ஆனால் நான் ரொறொன்டோவில் இறங்கியதிலிருந்து சந்தித்த ஒவ்வொரு தமிழரிடமிருந்தும் ஒவ்வொரு புதிய கதையை படித்துக்கொண்டேன். இலங்கைத் தமிழர்களின் கதை பல பக்கங்களைக்கொண்டது. அவர்களில் பலர் நடந்து முடிந்தது எவ்வித பலனையும்தராத யுத்தம் என்று உணர்கிறார்கள். பணம் புகழ் அதிகாரம் என்பவற்றின் மீது பிரபாகரன் கொண்டிருந்த பேராசை காரணமாக அவன் மக்களை கொன்றுகுவித்து, பயங்கரவாதமயமாக்கி, துஷ்பிரயோகம்செய்து ஒர் சமூகவிரோதிக்கான பரிபூரண சின்னமாக விளங்கினான் என அம்மக்கள் என்னிடம் அழுத்தம்திருத்தமாக கூறினார்கள். பல தாய்மார் தமது மகன்மார் யுத்தவெறிக்குள் பலாத்காரமாக தள்ளப்படுவதிலிருந்தும் பெண்பிள்ளைகள் கற்பழிப்புக்களிலிருந்தும் தப்புவதற்காக நாட்டைவிட்டே ஓட நிர்பந்திக்கப்பட்டோம் என மிகுந்த மனவுளைச்சலுக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

நாம் தற்கொலையை ஓர் சாகசமாக ஏற்று அதைப்போற்றி வாழ்த்துப்பாடும் ஒர் கலாச்சாரத்தை கொண்டுள்ளளோம். ஆனால் எமது வளர்ந்துவருகின்ற சமுதாயம் இவ்விடயத்தை ஓர் தலைசிறந்த செயற்பாடாக கற்றுக்கொள்கின்றது என்ற அபாயத்தை நாம் மறந்து விடுகின்றோம். நாம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டிய விடயம் இதுவல்ல..

கியூபாவிற்கு சென்று வந்தவர்கள் பிடல் கஸ்ரோ ஒரு புனிதமான புரட்சியாளன் என்று சொல்கின்றார்கள். ஆனால் அவரும் ஒரு போலி கதாநாயகன்தான். பருவமடையாத பெண்பிள்ளையை தாய் கூட்டிக்கொடுக்கிற நிலையில் அந்நாட்டின் வறுமை உள்ளது. ஆனால் பிடல்கஸ்ரோ இவ்விடயத்தில் எதுவும் செய்யவில்லை. அவர் தொலைக்காட்சியில் தோன்றியபோது அவ்வப்போது அவரின் மூஞ்சியில் மக்கள் துப்பினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

என்னைப்பொறுத்தவரை ஷாலினி அவர்கள் எதுவும் புதிதாக தெரிவிக்கவில்லை. புலிகள் என்று தமது கோரமுகத்தை தமிழ் மக்கள் மீதும் சகபோராளி அமைப்புக்கள் மீதும் காண்பிக்க முற்பட்டார்களோ அன்றே மேற்படி குற்றச்சாட்டுக்கள் நிருபணமாகியிருந்தது. அண்மையில் கனடாவில் திரையிடப்பட்டிருந்த „சொர்கத்தில் பிசாசுகள்'; என்ற குறும்படத்தில்கூட தமிழ் சமூகத்திடமிருக்கின்ற வன்செயல்நாட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. ரெலோ இயக்கத்தை தடை செய்த புலிகள் அவ்வியக்க உறுப்பினர்களை கைது செய்து அவர்களை உயிருடன் ரடயர்போட்டு எரித்த காட்சியை நேரடியாக கண்ட ஒருவரின் நடிப்பில் : புலிகள் ரெலோ அமைப்பினரை உயிருடன் டயர் போட்டு எரித்தார்கள். அங்கே இளைஞர்களின் உயிர் தீக்குள் துடிதுடித்துக்கொண்டிருந்தது. புலிகள் எரிகின்ற டயர்களுக்கும் உயிர்களுக்கும் காவல்நின்றார்கள். யாழ் தமிழ் சமூகம் காவல்நின்றவர்களுக்கு குளிர்பாணம் கொடுத்து உற்சாகமேற்றிக்கொண்டிருந்து என்று குறிப்பிட்டதுடன், யாழ் சமூகத்திடம் வன்முறைக்குணாம்சம் போராட்ட இயக்கங்கள் உருவாக முன்பிருந்தே இருந்திருக்கின்றது என்றார்.

இலங்கையில் புலிகள் கருத்துச்சுதந்திரத்தை தமது இரும்புக்கரம் கொண்டு நசுக்கி துவம்சம் செய்திருந்தாலும்; புலம்பெயர்தேசத்தில் பயங்கரவாதத்திற்கு வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டுக்கொண்டேயிருந்தது. ஷாலினி விடயத்தில் புலி-வியாபாரிகளின் அடக்குமுறை அவரின் முகநூல் கணக்கை முடக்கி அவரது குரல்வளையை நசுக்கிவிடலாம் என்ற முயற்சிவரை சென்றுள்ளமை தொடர்பில் விசாரணை செய்கின்றபோது, பழ நெடுமாறன், வைகோ, சீமான் என பல்வேறு இந்திய அரைகுறைகளை அழைத்து வியாபாரத்தை விஸ்தரித்துக்கொண்டிருக்கின்ற தமிழீழ வியாபாரிகட்;கு டாக்டர் ஷாலினியினுடனான அனுபவம் தெருவால்சென்ற பாம்பை சீலைக்குள்ளே விட்டதாக தென்படுகின்றது. தலைவர் வருவார்! தருவார் தமிழீழம்! என தமிழீழ மாத்திரை விற்பனை செய்கின்ற வியாபாரிகட்கு டாக்டரின் அறிக்கை தமிழீழ-மாத்திரை வியாபாரத்திற்கு சீல் வைக்கும் நிகழ்வாக உணரப்பட்டுள்ளது.

வியாபார நஷ்டத்திற்கு காரணமானவர்கள் என்று கருதப்பட்டோர் அத்தனைபேர்மீதும் காழ்புணர்ச்சி தீர்க்கப்படுகின்றது. கனடாவில் செயற்படுகின்ற ஒர் பெண் இழிசெயலர்களால் சிடுமூஞ்சித்தனமாக இலக்கு வைக்கப்பட்டுள்ளார். அப்பெண்ணை இலக்கு வைத்தவர்கள் அம்பாறை மாவட்ட மத்தியமுகாம் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கற்பழித்து கொல்லப்பட்ட கோணேஸ்வரியை மீண்டும் திரைக்கு கொண்டுவந்துள்ளனர். சுமார் இரண்டரை தசாப்தங்களாக கோணேஸ்வரியை வைத்து உண்டியல் குலுக்கும் கோணங்கிகளிடம் கோணேஸ்வரியின் அயலூர்காரனாகிய நான் கேட்கும் கேள்வி யாதெனில்: உங்கள் உண்டியல் குலுக்கலுக்கு உறுதுணையாய் நிற்கின்ற கோணேஸ்வரியின் குடும்பத்திற்கு இதுவரை உண்டியல் பணத்தில் எத்தனை பைசா வழங்கியுள்ளீர்கள்? அவரது குழந்தைகள் அனுபவித்த துன்பத்தில் எதாவது பங்கு கொண்டுள்ளீர்களா?

மேலும் தமிழ் சமூகம் கடந்தகால வன்முறை அனுபவங்களை மறக்கமுடியாதவர்களாக அதன் தாக்கங்கள் அவர்களை மனநோயாளிகளாக்கியுள்ளது என்பது ஷாலினி அவர்களால் மாத்திரம் முன்வைக்கப்பட்ட கருத்துக்கிடையாது. மேற்குலக நாடுகளில் பல்வேறுபட்ட வன்செயல் சார்ந்த செயற்பாடுகளுக்காக நிதிமன்றங்களில் குற்றவாளிகளாக்கப்பட்ட தமிழர்கள் சார்பாக வாதாடிய வக்கீல்கள்: 'தமிழ் மக்கள் கடந்துவந்த பாதை கடினமானதும் வன்முறை கலந்ததுமாகவும் இருந்திருக்கின்றது. அவர்கள் இவ்வனுபவங்களினால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதன் தாக்கமே இவர்களை வன்செயலுக்கு தூண்டுகின்றது என்பதை கருத்திற்கொண்டு அவர்களை விடுதலை செய்யுங்கள் அல்லது குறைந்தபட்ச தண்டனை வழங்குங்கள்'; என நீதிமன்றுகளில் மனுச்செய்யப்பட்ட தருணங்களில் மன்றுகள் அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றது என்பதை கிணற்றுத்தவளைகள் எவ்வாறு அறிந்திருக்கப்போகின்றார்கள். ஏன் இன்றுவரை மேற்குலக நாடுகளில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட பலருக்கு மேற்படி காரணத்திற்காக மனிதாபிமான ரீதியில் தங்குமிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதை வன்செயலின் போஷகர்கள் அறிந்திருக்கவில்லையா? அவ்வாறயின் புலி-வியாபாரிகள் பயங்கரவாதம் நியாயப்படுத்தப்படவேண்டுமென்பதற்காக சலுகைகளை தமிழர் இழக்கவேண்டும் என விரும்புகின்றார்களா?

இறுதியாக இந்தியத் தேர்தல்களில் இலங்தைத்தமிழர் விவகாரம் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றது என தெரிவித்துள்ள ஷாளினி. எதிர்வரும் காலங்களில் இவ்விடயம் தொடர்பாக பேசுபவர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் தான் தமிழர்களின் உண்மைக்குரல்களை செவிமடுத்துள்ளதாகவும் எச்சரித்துள்ளார். அத்துடன் 'ரஜீவ் காந்தியினால்தான் தமிழர்களாகிய நாம் இன்று இலங்கையில் வாழ்கின்றோம்'என தமிழர்கள் சிலர் தெரிவித்ததாவும் குறிப்பிட்டுள்ளதுடன் இனிமேலும் நாம் ஒருபக்க கதையை மாத்திரம் கேட்டுக்கொண்டிருக்கமுடியாது, விடயத்தை ஆழமாக படிக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆம். இலங்கையில் 13ம் திருத்தச்சட்டத்திற்கு வழிவகுத்த ராஜீவ்காந்தி அவர்களின் செயற்பாடும் இன்றுவரை தமிழ்நாட்டு மக்கள் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காட்டிவருகின்ற அக்கறையும் தரம்தாழ்த்த முடியாதது எனச் சிரம்தாழ்துகின்ற அதேநேரத்தில் இந்தியாவிடம் நாம் கற்றுக்கொண்ட கசப்பான பாடங்களையும் ஷாலினி அறிந்தாகவேண்டும்.

இந்தியாவின் வெளிவிவகாரக்கொள்கையானது இலங்கையின் இறையாண்மையை உதாசீனம் செய்வதாகவே இருந்துவந்துள்ளது. இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னதாகவே இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை எவ்வாறு இருக்கவேண்டும் என இந்தியா தீர்மானித்துள்ளது. டாக்டர் பலேக்கர் 1948ம் ஆண்டு எழுதிய „இந்தியப்பாதுகாப்பு'எனும் புத்தகத்தில் இலங்கை அரசு சுதந்திரம் கிடைத்தபோதும் தனது வெளிநாட்டுக் கொள்கையில் இந்தியாவுக்கு எதிரான கொள்கையை முன்வைத்தாலோ அல்லது தன்னை நடுநிலைமை என்று சொன்னாலோ அல்லது இந்தியாவின் ஜோதியாக இருந்தாலோ அது இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்தாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகின்றபோது இந்தியா மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். அதற்கு ஆசிய ஜோதி நேரு அவர்கள் வழங்கிய முன்னுரையில் அக்கருத்து சரியானது என்று ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் நாங்கள் 'அணிசேரா' (non-aligned) கொள்கையை கடைப்பிடித்து எமது இறைமையை நிலைநிறுத்துவோம் என்ற செய்தி இந்தியாவிற்கு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் இலங்கையில் தனது காலை நிலையாக பதிப்பதற்கு அல்லது இலங்கை அரசை அடிபணிய வைப்பதற்காக இலங்கையில் தமிழ் ஆயுதக்குழுக்களை உருவாக்கிய இந்தியா, அவ்வமைப்புக்களின் வளர்ச்சி கண்டு மிரண்டது. இலங்கையில் தமிழீழம் உருவாவது இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலான முன்னுதாரணமாகும் என்ற கருத்தை தமிழ் அமைப்புக்களுக்கு எடுத்துக்கூறி இலங்கையில் தமிழீழம் உருவாவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என தனது இரட்டை முகத்தை வெளிக்காட்டியது.

அத்துடன் நின்றுவிடாது தமிழ் அமைப்புக்களின் ஒட்டுமொத்த பலத்தை நொருக்கியது. அமைப்புக்களுள் உள்மோதல்களை உருவாக்கி அவற்றை பலவீனமாக்கியதுடன் இயக்கமோதல்களுக்கும் தூபமிட்டது. இவை தொடர்பான வரலாறு புத்தகங்களாகவே எழுதப்படமுடியும்... எனவே இந்தியா இட்;ட 13 என்ற பிச்சையில்தான் இலங்கையில் தமிழர்களின் இருப்பு உறுதியானது என்ற மமதையை இந்தியா ஒடித்துக்கொள்ளவேண்டும்.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>