![](http://4.bp.blogspot.com/-cn-BQ9ylvJw/W8Wvom2-1-I/AAAAAAAAsaM/ExrL0w54ynYrHiczwFV35Z6zNxnzMIg_ACLcBGAs/s200/red%2Bmarket%2B1.jpg)
குழந்தைகளை அழைத்து செல்லும் வண்டியில் மனித உடல் உறுப்புகளை எடுத்து சென்ற ஒரு தம்பதியை மெக்சிகோ போலீஸார் கைது செய்தனர். இவர்களை விசாரித்ததில், மெக்சிகோ புறநகர் பகுதியில் உடல் உறுப்புக்காக இருபது பேரை இவர்கள் கொலை செய்தார்கள் என தெரியவந்தது. உடல் உறுப்புகளை யாருக்கு விற்றார்கள், இதன் பின் உள்ள வலைப்பின்னல் என்ன? என்ற நோக்கில் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இது ஏதோ ஒரு நாட்டில் நடந்த சம்பவமென சுலபமாக கடந்து சென்று விட முடியாது. ஆம், உலகெங்கும் இது நடந்திருக்கிறது. நடந்து கொண்டும் இருக்கிறது. அவ்வாறான சம்பவங்கள், அதற்கு பின்னால் இருப்பவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என விரிவாக விவரிக்கிறது பத்திரிகையாளர் ஸ்காட் கார்னி எழுதியுள்ள 'சிவப்புச் சந்தை'புத்தகம்.
'சர்வம் டாலர்மயம்'
புலனாய்வு பத்திரிகையாளரான ஸ்காட் கார்னி பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியவர். பிபிசி உட்பட பல்வேறு சர்வதேச ஊடகங்களில் இவரது கட்டுரை வெளியாகி இருக்கிறது. இவர் உலகெங்கும் விரவி இருக்கும் உடல் சந்தை குறித்து ஆராய்ந்து, தன் புலனாய்வில் திடுக்கிட வைத்த விஷயங்களை புத்தகமாக தொகுத்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த புத்தகம் உடல் சந்தை குறித்த ஒரு சித்திரத்தை நமக்கு வழங்குகிறது.
![](http://4.bp.blogspot.com/-6qt2oGkZX1o/W8WvouUGm3I/AAAAAAAAsaQ/X18P4DdudqEE7skMxeh1WViF4OJVgkKigCLcBGAs/s320/red%2Bmarket%2B2.jpg)
'கிட்னிவாக்கம்'
கிறிஸ்துமஸுக்கு மறுநாள், 2004 ஆம் ஆண்டு இந்தோனீசியாவில் நிலநடுக்கும் ஏற்பட்டு சென்னையை சுனாமி தாக்கியபோது, அனைவரும் பதபதைத்து போனார்கள். சென்னைக்கு சுனாமி புதிது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், சுனாமி என்ற வார்த்தையே புதிது. ஆனால், அந்த சுனாமியை லாபம் கொழிக்கும் வாய்ப்பாக உடல் உறுப்பு தரகர்கள் பார்த்தார்கள் என விவரிக்கிறார் ஸ்கார்ட் கார்னி.
அதாவது ஆழிப்பேரலையால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் எளிய மக்களின் சூழலை பயன்படுத்தி அவர்களிடமிருந்து உடல் உறுப்புகளை அறுவடை செய்தார்கள். வாரத்திற்கு இரண்டு பேர் கிட்னியை விற்பனை செய்தார்கள். இதன் காரணமாக அந்த பகுதியே கிட்னிவாக்கம் என பெயர் பெற்றது என்று தனது 'சிவப்புச் சந்தை'புத்தகத்தில் விவரிக்கும் ஸ்காட், அப்படி விற்பனை செய்தவர்களும் ஏமாற்றப்பட்டார்கள் என்கிறார்.
![](http://1.bp.blogspot.com/-0uUFIR4xigw/W8WvotkOBjI/AAAAAAAAsaU/mOAiXXgCKGASXQktX60XU58P2kI8_NtNwCLcBGAs/s320/red%2Bmarket%2B3.jpg)
'பிணமும் பணம்தான்'
கிட்னி திருட்டு நாம் ஏற்கெனவே கேள்விப்பட்டதுதான். அது குறித்து பல திரைப்படங்களும் வந்துள்ளன. ஆனால், பிணம் மூலமும் பணம் ஈட்டுகிறார்கள் என்ற விஷயம் ஒரே சமயத்தில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது.
கொல்கத்தாவில் கல்லறை திருடர்கள் பற்றி இவர் குறிப்பிட்டு இருப்பது, விறுவிறுப்பான ஒரு சினிமாவுக்கான கதை.
![](http://4.bp.blogspot.com/-hDeMloVvg3I/W8WvpTSb7kI/AAAAAAAAsac/rdPPx6j1BuYY-7XXB-fd4ahEFQ6dJC9GwCLcBGAs/s320/red%2Bmarket%2B4.jpg)
மருத்துவ ஆய்வு சோதனைகளில் எப்படி மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அதுவும் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் கை செலவுக்காக இதில் சிக்குகிறார்கள். எப்படி எந்த இரக்கமும் இல்லாமல் கருவுற்ற பெண்கள் மீது அவர்கள் சம்மதமே இல்லாமல் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பதை விவரிக்கிறார்.
அதில் ஒரு பத்தியை இங்கே பகிர்கிறேன்,
"2004இல் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைமை அதிகாரி, பெங்களூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட பயோடெக் உயிர்த் தொழில்நுட்ப நிறுவனங்களை ஆய்வு செய்கிறார். அந்நிறுவனங்கள் சட்டத்துக்கு புறம்பாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட இன்சுலின் மருத்துவ ஆய்வு சோதனை நடத்தியது. அந்த நிகழ்வில் எட்டு நோயாளிகள் மரணமடைந்தனர். அந்த நிறுவனங்கள் ஆய்வில் பங்கெடுத்தவர்களின் அறிவார்ந்த சம்மதத்தைக் கூட கேட்டுப் பெறவில்லை"என்று ஸ்கார்ட் கார்னி எழுதுகிறார்.
![](http://3.bp.blogspot.com/-i6ghXQ4sQg0/W8Wvp4PO_0I/AAAAAAAAsaY/4Eh3YVx2A-ApYiYNhVb5VoPU6FkTSuOfgCLcBGAs/s320/red%2Bmarket%2B5.jpg)
'விந்து, கருமுட்டை மற்றும் முடி'
விந்து, கருமுட்டை, வாடகை தாய், இந்த வணிகத்தில் கோலூச்சும் சைப்ரஸ் நாடு என பக்கத்திற்கு பக்கம் தரவுகளுடன் மனித உடல் உறுப்பு சந்தை குறித்து விவரிக்கும் இந்த புத்தகம், இந்திய மனித முடியின் உலகளாவிய சந்தை குறித்தும் குறிப்பிட்டுள்ளது.
திருமலையில் நடக்கும் முடி ஏலம் குறித்த ஒரு சம்பவம் விவரிக்கப்பட்டிருக்கிறது. நடு இரவு வரை நடந்த அந்த ஏலத்தில் அதிக உறுதியான இரு கிலோ முடி 193 டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது.
உலகளாவிய உடல் வணிகத்தை, அதன் பொருளாதாரத்தை, பின்னணியில் இருப்பவர்களை, உடல் உறுப்பு தானத்தில் இருக்கும் சட்ட குறைபாடுகளை தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள உதவுகிறது இந்தப் புத்தகம்.
பிபிசி தமிழ்