நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று கேகாலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கையின் 66 ஆவது சுதந்திர தின விழாவில் தெரிவித்தார்.
மேலும் உங்களுக்கு நினைவிருக்கும் 2005 ஆம் ஆண்டில் மகிந்த சிந்தனை முன்வைக்கப்பட்டபோது மூன்றில் ஒரு பகுதி நிலம் எமது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை, மூன்றில் இரண்டு பகுதி கடற்பரப்பு எமது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை.
ஆனால் இன்று முழு நாடும் சுதந்திரத்தை அனுபவிக்கிறது. கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் யாருமே எதிர்பார்த்திராத அபிவிருத்தியை இன்று நாம் நாட்டு மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.
நாம் மிக வேகமாக யுத்தத்திலிருந்து சமாதானத்துக்கும் ஏழ்மையிலிருந்து அபிவிருத்திக்கும் மாற்றமடைந்தோம்.
வடக்கில் மனித உரிமைகள் மீறப்பட்டு அதற்காக குரல் கொடுக்க யாரும் இல்லாத காலகட்டத்தில் அதற்காக நாம் குரல் கொடுத்தோம். அந்தத் தேவை எமக்கு மாத்திரமே இருந்தது.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர் பயங்கரவாதத்துக்கு இணைக்கப்பட்டனர் பாடசாலை மாணவர்கள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டனர் அரச ஊழியர்களின் சம்பளத்தின் ஒரு பகுதி பலவந்தமாக பறிக்கப்பட்டதுடன் வடக்கு மக்கள் சுதந்திரத்தைத் தேடி தெற்கிற்கு வந்தார்கள்.
கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, மோதரை, மட்டக்குளிய பகுதிகளுக்கு வந்தார்கள் அப்போது பயங்கரவாதத்தை தோற்கடித்து வடக்கு மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தோம்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் 3 தசாப்த காலங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் இப்போது இல்லை. இன்று வடக்கு மக்கள் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் போது சில வெளிநாட்டு சக்திகள் அவர்களை திசை திருப்ப முயற்சிக்கின்றன.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுவதிலுள்ள சிரமத்தை பலமிக்க நாடுகள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும் இன்னும் கூட பல நாடுகள் பயங்கரவாதத்தை தோற்கடிக்கப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் நாம் அதனைச் செய்திருக்கிறோம்.
பயங்கரவாதத்தை தோற்கடித்து கடந்த 4 வருடங்களில் நாம் அடைந்த அபிவிருத்தியை வேறு நாடுகள் அடைந்திருக்கின்றனவா என கேட்கத் தோன்றுகிறது.
மனித உரிமை மீறல்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஜெனிவாவில் எமக்கு எதிரான பிரேரணைகளை கொண்டு வர பலர் முயற்சிக்கின்றனர். இது சமாதானத்தை விரும்பாதவர்களின் செயற்பாடாகும்.
இந்த செயற்பாட்டின் நோக்கம் சமாதானம் அல்ல. நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதை திட்டவட்டமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இப்போதுள்ள போராட்டம் நாட்டை நேசிப்பவர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலானதாகும்.
கசப்பான அனுபவம் கடல் மண்ணில் எழுதப்பட்டது போலவும் நல்ல அனுபவம் கல்லில் எழுதப்பட்டது போலவும் ஆக்கிக்கொள்ள பழக வேண்டும். கடல் மண்ணில் எழுதியது மறைந்துவிடும் ஆனால் கல்லில் பொறிக்கப்பட்டது ஒருபோதும் மறையாது. அது சதா காலமும் அப்படியே இருக்கும்.
அன்று எங்களை கொல்ல வந்தவர்களை நாம் மன்னித்து பழையனவற்றை மறந்து செயற்பட்டோம். பழிவாங்குதல் என்பது எமது கலாசாரத்தில் இல்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.