![](http://4.bp.blogspot.com/-mBy52ThmN7E/VNjstPrQceI/AAAAAAAAoqA/iEbxGRbwYgk/s320/sampanthan%2Bin%2Bjaffna.jpg)
பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய அதிக அசுர பலத்தை தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வழங்கி வந்திருக்கின்றனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியல் என்கிற பெயரில் தமிழ் மக்களின் நம்பிக்கைகளை நுட்பமாக சிதைத்தே வந்திருக்கின்றது.
இன்று நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இது தமிழர் வாழ்விலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பு ஆகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனேயே புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியின் அதிகார மையத்தில் அமர்த்தப்பட்டு உள்ளார். இவர் கடுமைப் போக்காளர் அல்லர். எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பீடம் ஏறிய இவரே இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.
இதனால் எதிர்க்கின்ற கட்சிதான் எதிர்க் கட்சி என்கிற நிலை இன்று இல்லை. நீலம், பச்சை என்கிற வேறுபாடு இல்லாமல் போய் விட்டது. உண்மையில் எதிர்க் கட்சி இல்லாத தேசிய அரசாங்கம் மலர்ந்திருக்கின்றது என்றும் கூறலாம். எனவே தமிழர் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள இது மகத்தான வாய்ப்பாக கிடைக்கப் பெற்று உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இச்சந்தர்ப்பத்தையாவது தவற விடாது பயன்படுத்த வேண்டும். நிறைவேற்று அதிகார முறை ஒழிக்கப்பட்டு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் மீண்டும் ஒரு முறை இவ்வாறான வாய்ப்பு கிடைக்கப் பெறவே மாட்டாது.
புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது இதில் இணைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. தலைவர் இரா. சம்பந்தன், தேசியப் பட்டியல் எம். பி எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்க மாட்டார்கள் என்று அறிவித்து கெடுத்து கொண்டனர்.
ஆனால் யதார்த்தத்தில் இது அல்ல உண்மையான நிலை. அமைச்சரவையை விட அதிகாரம் மிக்க சபை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உருவாக்கப்பட்டு உள்ளது. நாட்டின் தேசிய விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தக் கூடிய சகல கட்சிகளின் தலைவர்களும் இதில் அங்கம் வகிக்கின்றார்கள். அரசாங்கத்தின் மிக முக்கிய விவகாரங்கள் இங்கு கலந்து ஆலோசிக்கப்பட்டே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.
இதன் பெயர் தேசிய நிறைவேற்று சபை. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் அங்கம் வகிக்கின்றார். எனவே அரசாங்கத்தில், அமைச்சரவையில் இல்லை என்று சொல்லி தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றவோ, தீர்வு முயற்சியில் இருந்து தப்பிக் கொள்ளவோ முடியாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசநாயக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியூதீன், ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரும் நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்கின்றனர்.
இனப் பிரச்சினைத் தீர்வுக்காக முன்பு உருவாக்கப்பட்ட சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இன்னொரு வடிவம் போலவும் நிறைவேற்று சபை அமைகின்றது. சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் சேரப் போவது இல்லை என்று சொல்லி அடம் பிடித்தது போல் அல்லாது நிறைவேற்றுக் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்து இருப்பது ஆரோக்கியமான விடயமாகும். ஆனால் இதன் மூலமான உச்ச நன்மைகளை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இதய சுத்தியுடன் செயற்பட தவறுகின்ற பட்சத்தில் இதுவும் தவற விடப்படுகின்ற வாய்ப்பாகவே வரலாற்றில் பதிவாகி விடும்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை உளுத்துப் போன தீர்வு முயற்சி என்று சொல்லி பொன்னான வாய்ப்பை முன்பு மண்ணாக்கினார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தீர்வுப் பொதியை எரித்தார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வு முயற்சியை எதிர்த்தார்கள்.
ஆனால் காலம் காலமாக சுமந்து வந்திருக்கின்ற பாரம்பரிய அரசியல் நிலைப்பாடுகள் சிலவற்றில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகிச் செல்வது போன்ற தோற்றப்பாடு பல விடயங்களில் இப்போது தெரிகின்றது. மாகாண சபை ஆட்சியில் ஈடுபாடு காட்டுகின்றனர். ஜனாதிபதியின் தேசிய நிறைவேற்று குழுவில் அங்கம் வகிக்கின்றனர். சுதந்திர தின வைபவத்தில் பங்கேற்று உள்ளனர். வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். இவை எல்லாவற்றையும் தமிழ் மக்களின் நன்மைகளை உத்தேசித்தே செய்கின்றனர் என்று கூறுகின்றார்கள். இது உண்மையாக இருக்குமானால் கிடைத்து இருக்கின்ற புதிய சந்தர்ப்பத்தை தவற விடாது வேகமாகவும், விவேகமாகவும் செயற்பட்டு தமிழர் பிரச்சினைக்கு அர்ப்பணிப்புடன் தீர்வு காண தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்க வேண்டும்.
நாம் எல்லோரும் சீட்டாட்டம் குறித்து பொதுவாக அறிவோம். திறமையான சீட்டாட்ட வீரர்கள் அருமையான சீட்டுக்கள் கிடைக்கப் பெறாத போதும், அற்பமான சீட்டுக்களே கிடைக்கப் பெறுகின்றபோதும் சாமர்த்தியமாகவும், நுட்பமாகவும். ஈடுபாட்டுடனும் விளையாடி வெற்றியை தட்டிக் கொள்வார்கள். திறமை அற்ற வீரர்கள் அருமையான, அபூர்வமான சீட்டுக்கள் கிடைக்கப் பெறுகின்றபோதும் சாமர்த்திய குறைவு, அலட்சியம் ஆகியவற்றால் வெற்றியை கோட்டை விட்டு விடுவார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் சீட்டாட்டத்தில் இப்போதாவது சாதுரியமாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.