![](http://1.bp.blogspot.com/-lstrfcc_eRw/XCt3PayxaXI/AAAAAAAAANc/UivIVSgbUEUPSctxIkEEGJViMZ0YbzdsgCLcBGAs/s200/Women-harvest-tea-leaves-at-a-plantation-in-Kondoli-in-Assam-state-on-June-19-2009.-AFP_File-e1356604913303.jpg)
தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர தொழிலாளர் முன்னணி, சம்பள உயர்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ளது.
வேதன அதிகரிப்பு விடயத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதாக தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர தொழிலாளர் முன்னணி , இந்த நிலையை தடுக்கும் விதமாக 2019 ஆண்டில் முனைப்புடன் செயல்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு குறித்து கருத்து வெளியிடும் போது ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர தொழிலாளர் முன்னணியின் தலைவர் நிரோஷான் தயானந்த இந்த விடயத்தை கூறினார்.
தொழிலாளர்களின் வேதன உயர்வு விடயத்தை தமது சுய அரசியல் லாபத்திற்காக பல அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தினார். வறுமைக்கு கோட்டுக்குள் வாழ்ந்து வரும் தொழிலாளர்களின் தேவைகளை புரிந்துகொண்டு, அவர்களை ஏமாற்றாமல் அனைவரும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் நிரோஷான் தயானந்த கோரிக்கை விடுத்தார்.
பல தொழற்சங்கங்கள் மக்கள் மீது அக்கறை கொள்ளாது வேதன விடயத்தில் தான்தோன்றி தனமாக நடந்து கொள்வதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இறுதியாக செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி 3 மாதங்கள் ஆகி விட்டன. எனினும் இது குறித்து எந்தவித முன்னேற்றகரமான முடிவுகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. அரசியல் குழப்பங்களை காரணம் காட்டி, மக்களை ஏமாற்றும் தொழிற்சங்கங்கள் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தி வருகின்றன.
எனினும் பெருந்தோட்ட மக்கள் தமது ஒருநாள் சம்பளத்தையும் இழந்து, நாளுக்கு நாள் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இருந்தபோதும் இந்த வேதன உயர்வு பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. எனவே இந்த நிலை தொடராமல் இருக்க, இந்த ஆண்டில் வேதன உயர்வு தொடர்பாக முனைப்புடன் செயல்படவுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர தொழிலாளர் முன்னணியின் தலைவர் நிரோஷான் தயானந்த குறிப்பிட்டுள்ளார்.