Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

வவுனியா சிறுவர் இல்லத்து பாலியல் துஷ்பிரயோகமும் அரச நிறுவனங்களின் இயலாமை மற்றும் சுயாதீனமற்ற செயற்பாடுகள்

$
0
0
வவுனியாவில் அட்டம்பகஸ்கட 'செத் செவன லமா நிவச'சிறுவர் இல்லத்தை நடாத்தி வந்த கல்யாண திஸ்ஸ தேரர் என்ற பௌத்த மதகுரு அவரது பாதுகாப்பில் இருந்து வந்த 09 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமை விசாரணைகள் மூலம் தெரிய வந்ததன் பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறிப்பிட்ட சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை மருத்துவப் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது 12.10.2013 ஆம் திகதி பாதிக்கப்பட்ட 9 வயதுச் சிறுவனையும் பின்னர் இரண்டு நாட்களின் பின்னர் அதாவது 15.10.2013 அன்று குறிப்பிட்ட இல்லத்தில் எஞ்சி இருந்த 22 பிள்ளைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டது.

குறிப்பிட்ட சிறுவனைத் தவிர மேலும் அங்கு இருந்த 22 சிறுவர்களும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருக்கலாம் என்ற நிலையில் அவர்களது மருத்துவ அறிக்கை வவுனியா நீதிமன்றினால் கோரப்பட்டிருந்தது.

அதுவரை காலமும் குறிப்பிட்ட சந்தேக நபர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இச்சிறுவர் துஷ்பிரயோக சந்தேக நபரிற்கு எதிரான வழக்கின் வழக்குத் தொடுனராக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது பொறுப்பேற்றுக் கொண்டது.

எனினும் 31.12.2013 இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது தேசிய பாதுகாப்பு அதிகார சபை அளித்த அறிக்கையின் பிரகாரம் சட்டமா அதிபர் குறிப்பிட்ட மதகுருவிற்கு பிணை வழங்குவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை எனக் கூறியமையால் நீதிமன்றத்தால் நிபந்தனையற்ற பிணையில் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்குத் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்களில் பலர் ஏற்கனவே யுத்தத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களேயாகும். உறவுகளை இழந்து வறுமைக்கு உட்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பையும், பராமரிப்பையும், கல்வியையும் முக்கியமாகக் கருதி எஞ்சியுள்ள உறவுகளால் குறிப்பாகத் தாய்மாரினால் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கு தங்க வைக்கப்பட்ட பிள்ளைகளது தந்தைமார் யுத்தத்தினால் இறந்தோ அல்லது பிரிந்து சென்றதன் காரணத்தினாலோ வறுமைக்கு ஆளாகியிருந்தனர்.

சில பிள்ளைகளது தாய்மார் நாளாந்தம் கல் உடைக்கும் கடினமான கூலி வேலை செய்து வாழ்க்கை நடாத்துகின்ற ஏழ்மைக்குள்ளாகியோராவர்.

தமது பிள்ளைகளது எதிர்காலக் கல்வி மற்றும் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு தாய்மார்கள் அவர்களை இவ்வில்லத்தில் இணைத்துள்ளார்கள். அவ்வாறு சேர்க்கப்படுகின்ற இளஞ் சிறார்களது உயிரும் உரிமைகளும் எவ்வளவு தூரம் இல்லத்துத் தலைமைகளால் பேணப்படுகின்றது:

பாதுகாக்கப்படுகின்றது என்பது கேள்விக்குரிய விடயமாகும். ஏனெனில் குறிப்பிட்ட 'செத் செவன லமா நிவச'என்ற இல்லத்தில் இருந்த சிறுவர்கள் தமிழ் சிறுவர்களாக இருந்த போதும் காட்டு மாங்குளம் அரசினர் சிங்கள கலவன் பாடசாலையில் அவர்களை வலுக்கட்டாயமாக சிங்கள மொழியில் கல்வி பயில அனுப்புவதன் மூலம் அவர்களது மொழி, சமயம், இனத்திற்கான அடையாளங்களை இல்லாது ஒழித்து அவர்களுக்கு சிங்கள மொழி, பௌத்த மத கலாசார அடையாளங்களை வலுக்கட்டாயமாகத் திணிக்க முற்பட்டமையானது எவ்விதத்தில் சிறுவர் உரிமைகளைப் பேணுவதாக அமையும்? குறிப்பிட்ட இல்லம் தொடர்பாக 29.11.2010 வவுனியா மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர், காவற் துறை போன்ற அலுவலகர்கள் ஒன்றிணைந்து ஆராய்ந்து சமர்ப்பித்த அறிக்கை, வவுனியா மாவட்ட ரீதியில் இருந்து பல தரப்பிலிருந்தும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் எவ்வித ஆக்கபூர்வமான பாரபட்சமின்றிய விசாரணைகள் மேற்கொள்ளாத காரணத்தினால் இன்று இளஞ் சிறார் குழுவொன்று உடல் மற்றும் உள ரீதியில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுவர் பெண்களுக்கான தனியான அமைச்சு ஒன்றின் கீழ் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, சிறுவர் செயலகம் போன்ற நிறுவனங்கள் செயற்படுகின்றன.

அதுமட்டுமன்றி மாவட்ட மற்றும் பிரதேச ரீதியில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்காக அலுவலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அரசமட்டத்தில் சிறுவர்களுக்கான கட்டமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இத்தருணத்தில் குறிப்பிட்ட பாலியல் துஷ்பிரயோக வழக்கில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது சட்டமா அதிபரின் மூலமாக சந்தேக நபர் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையின் நிமித்தமே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே பாதிக்கப்பட்ட சிறுபான்மைத் தழிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கொண்ட கரிசனையானது எத்தகையது என்பது ஐயத்துக்கிடமானது.

ஏனெனில் குறிப்பிட்ட பௌத்த மதகுரு தொடர்பான முறைப்பாடுகள் 2010 ஆண்டு தொடக்கம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைக்கப் பெற்ற போதும் குறிப்பிட்ட நிறுவனம் சந்தேக நபரை பாதுகாப்பதான நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளது.

பௌத்த துறவியை விசாரணை செய்து கைது செய்யும் தருணத்தில் கூட குறிப்பிட்ட அரச நிறுவனம் காலம் கடத்தியுள்ளது. இதேவேளையில் இச்சம்பவத்தைக் கண்டித்தும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினது அசமந்தப் போக்கினைக் கண்டித்தும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவவாறான அழுத்தங்களின் பின்னரே குறிப்பிட்ட மதகுரு கைது செய்யப்பட்டார்.

'தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது சிறுவர்களுக்கு உகந்ததும் பாதுகாப்பானதுமான சூழலொன்றை கட்டியெழுப்புதலை நோக்கமானதாகவும்இ சிறுவர்கள் சகல வகையிலுமான துஷ்பிரயோகங்களில் இருந்து விடுதலை பெற்றிருப்பதை உறுதி செய்தலை தனது செயற்பணியாகவும் கொண்டு செயற்படுகின்றது'எனக் கூறப்படுகின்றது.

அத்தோடு 1929 என்ற சிறுவர் உதவி தொலைபேசி மூலம் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்காக 24 மணி நேரமும் மும்மொழியிலும் சேவையாற்றுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறு இருக்கையில் துறவியினால் பாதிப்புக்குள்ளாக்கப்ட்ட சிறுவனது பாதுகாப்புத் தொடர்பாக கவனத்தில் கொள்ளாது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது சந்தேக நபரது பிணை விடுதலைக்கு சாதகமான அறிக்கையை வழங்கியுள்ளமை அதன் தனித்துவத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இவ்வழக்குத் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவன் சார்பில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் அவர்களது கருத்துப்படி 'சட்டமா அதிபர் உண்மையில் சந்தேக நபருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

பாரதூரமான குற்றச் செயலைப் புரிந்த நபருக்கு பிணை வழங்க ஆட்சேபனை இல்லை என்று சொல்வதானது சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்தை இழக்கச் செய்கின்ற விடயமாகும். அவர்கள் அரசியல் ரீதியாகவும், குற்றவாளிகளுக்கு சார்பாகவும் கவனமெடுக்கிறார்களே தவிர பாதிக்கப்பட்ட நபர்களைப் பாரபட்சப்படுத்துகிறார்கள்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. அவர்களே குற்றவாளிகளுக்கு சார்பாக அறிக்கை சமர்ப்பிப்பதோடு, அவசியமாக நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டியவற்றை சமர்ப்பிக்காது குறிப்பாக ஏனைய சிறுவர்களது மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காது சட்டமா அதிபருக்கு அனுப்பியமை, வழக்குத் தொடுனராக இருந்து கொண்டு ஆரம்பம் முதல் பூரண விசாரணை முடிய முன்னரே விசாரணை முடிந்ததாக கூறி துறவியின் பிணைக்கு ஆட்சேபம் தெரிவிக்காமை போன்ற காரணங்களும், தவறான தகவல்களை நீதிமன்றுக்கு வழங்கி நீதிமன்றினைத் தவறாக வழிநடத்த முற்பட்டமை மற்றும் தற்போது பிணையில் வெளிவந்த சந்தேக நபர் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடிய அபாயத்தை உருவாக்கியமை போன்ற செயற்பாடுகளை சந்தேக நபருக்கு சாதகமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மாற்றியுள்ளது. இவ்வாறான செயற்பாடு சமூக நோக்கின்றி அரச நிறுவனங்கள் இன்று செயற்பட்டுக் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றது. அதிலிலும் குறிப்பாக நீதிசார் நிறுவனங்களே இவ்வாறு செயற்படுமானால் சமூக விழுமியங்களை அல்லது சட்டவாட்சியை எவ்வாறு நிலை நாட்டுவது என்பது வினாவுக்குரியதே.'

யுத்தத்தால் பெற்றோர்களை இழந்தும் தனித்து விடப்பட்ட சிறுவர்களை துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வவுனியா இல்லச் சிறுவர்கள் போன்ற சிறார்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுபீட்சத்தை வழங்குவது இன்றியமையாதது. வவுனியா இல்லத்தில் பிள்ளைகள் அடிமைகள் போல நடாத்தப்பட்டபோதும் அவற்றிற்குக் காரணமானவர்களைப் பாதுகாப்பதற்காக ஏழைத் தமிழ்ச் சிறுவர்களை இன ரீதியில் வேறுபடுத்திப் பார்க்கும் அரச நிறுவனங்களின் செயல் காரணமாக அவற்றினது சுயாதீனத் தன்மையினது தனித்துவமானது மழுங்கடிக்கப்படும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அண்மையில் திருகோணமலையில் கடற்படையினருடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் 4 வயதுச் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்து விட்டு கடற்படையினரது முகாமிற்குள் ஓடி ஒழித்தமை, சிறுவர்களுக்கு மற்றும் பெண்களுக்கு எதிராக இலங்கையில் நிகழ்கின்ற துஷ்பிரயோக சம்பவங்களை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.

சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக வலுவான சிறுவர் பாதுகாப்புக் கொள்கைகளைக் கொண்ட நாடு என்ற ரீதியில் அவற்றை அமுலாக்கம் செய்து இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குத் தண்டணை வழங்க முடியும். அதுமட்டுமன்றி மாவட்ட மற்றும் பிரதேச ரீதியில் சிறுவர் மற்றும் பெண்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உத்தியோகத்தர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டும் இருப்பதோடு தனியான சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு என்பன ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக சிறுவர் பெண்கள் தொடர்பிலான அபிவிருத்திக் கட்டமைப்புகள் இருந்த போதும் பெண்கள் விவகாரம் மற்றும் சிறுவர் அபிவிருத்திக்கென அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டும் உள்ள நாட்டில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகளைத் தடுப்பதற்கும் அதேவேளை பாதிக்கப்பட்ட நபர்கள் உரிய நீதியை பெறுவதற்கும் முடியாதுள்ள தன்மையை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

இலங்கை சமாதானமான அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடு எனவும், ஆசியாவின் அதிசயம் எனவும் அரசாங்கத்தால் சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களும் பரிந்துரைகளும் மேற்கொள்ளப்படுகின்ற இத்தருணத்தில் மீண்டும் மீண்டும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்ற பெண்கள், சிறுவர்கள் அதிலும் குறிப்பாக சிறுபான்மையினத்துப் பெண்கள் சிறுவர்களுக்கான பாதுகாப்புஇ சுதந்திரம் பற்றி கரிசனை கொள்வது காலத்தின் கட்டாய தேவையாகும்.

பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு (வடக்குக் கிழக்கைச் சேர்ந்த எட்டுப் பெண்கள் அமைப்புக்கள் சேர்ந்த வலையமைப்பு)

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>